தேவர் குருபூஜை விழா; பசும்பொன்னில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேவர் குருபூஜை விழா; பசும்பொன்னில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில், முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்தநாள் விழா, 59வது குருபூஜை விழா, நேற்று முன்தினம் (28ம் தேதி) காலை ஆன்மிக விழாவாக யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

நேற்று முக்கிய பிரமுகர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இன்று குருபூஜை விழா நடந்தது. அரசு சார்பில் நடந்த இந்த குருபூஜை விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றார்.

மதுரையில் இருந்து இன்று காலை புறப்பட்ட அவர் 9. 40 மணிக்கு பசும்பொன் வந்தடைந்தார். முதல்வரை வரவேற்க கொட்டும் மழையிலும் பெண்கள் குடைபிடித்தபடி நின்றிருந்தனர்.

‘முதல்வரே வருக’ என அவர்கள்  பதாகைகளை பிடித்து, வரவேற்றனர். தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும், மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினார்.



அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், அர. சக்கரபாணி, ராஜகண்ணப்பன், பி. மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மகேஷ் பொய்யாமொழி, கீதாஜீவன் மற்றும்  கலெக்டர் சங்கர்லால் குமாவத், எம்பி நவாஸ்கான், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம், தமிழரசி, வெங்கடேசன், முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தின் பொறுப்பாளர் பாண்டி மீனாளை சந்தித்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசினார்.

பின்னர் முதல்வர் மீண்டும் மதுரை புறப்பட்டார்.

முன்னதாக இன்று காலை 7. 15 மணியளவில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மாலை அணிவித்தார். பின்னர் சிலையின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தேவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு புறப்பட்ட அவர், வழியில் வண்டியூர் ெதப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர் மருது பாண்டியர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, பி. மூர்த்தி, கீதாஜீவன், மகேஷ் பொய்யா மொழி, எம்எல்ஏக்கள் தளபதி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.



‘‘எளிமையான முதல்வர்’’ மக்கள் பாராட்டு
முதல்வர்கள் பங்ேகற்கும் நிகழ்ச்சிகள் அதிக கெடுபிடியுடனும், முதல்வர் செல்லும் வழித்தடத்தில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்படுவது வழக்கம். மதுரை போன்ற நகரங்களில் அதிக நேர போக்குவரத்து பொதுமக்களிடம் நீண்ட காத்திருப்பை உருவாக்கும்.

ஆனால், ேநற்றும், இன்றும் மதுரையில் இரண்டு நாட்களாக முதல்வர் ஸ்டாலின் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் போக்குவரத்து இடையூறின்றி பங்கேற்றது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றது. முதல்வர் செல்லும் வழித்தடத்தில் குறைந்தது அரைமணி நேர போக்குவரத்து நிறுத்தம் என்பது முதல்வர் ஸ்டாலின் மதுரையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பின்பற்றப்படவில்லை.



முதல்வரின் வாகனம் கடந்து செல்லும் 2 நிமிட நேரம் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதோடு, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிலும் முதல்வரை வரவேற்று எந்தவித பிளக்ஸ், பேனர்களோ, வரவேற்பு பதாகைகளோ எங்கும் வைக்கப்படவில்லை.

யாருக்கும் எந்தவித இடையூறுகளும் இல்லாமல் முதல்வர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எளிமையான முதல்வர் என பொதுமக்கள் மு. க. ஸ்டாலினைப் பாராட்டினர்.

.

மூலக்கதை