அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டும் தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டும் தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையையொட்டி இன்று 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு தொடர்ந்து 20  நாட்கள் கேரளா, உத்தரகண்ட், டெல்லி, கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம், அசாம்,  சிக்கிம், மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. இந்த  மழையானது சராசரி மழையளவை காட்டிலும் 109 சதவீதம் அளவிற்கு கூடுதலாக பெய்தது.



இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரமாக  அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, கடந்த 3 நாட்களுக்கு முன் வடகிழக்கு  பருவமழை துவங்கியதால், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த  தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

இதனால் நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும்  பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய பலத்த மழை  கொட்டியது.

இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்ட  அறிவிப்பில், ‘28ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை ஆந்திராவின் கடலோர  மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக இன்று அதிகளவில்  மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (அக்.

31) கடலோர மற்றும் தெற்கு உட்புற  கர்நாடகாவிலும், நாளை (அக். 30) ராயல்சீமாவிலும் பலத்த மழை பெய்ய  வாய்ப்புள்ளது.

இலங்கையின் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள  குறைந்த அழுத்த தாழ்வுப் பகுதியால், சூறாவளி காற்று வீசும். சராசரி கடல்  மட்டத்திலிருந்து 3. 1 கி. மீ தூரம் வரை இந்த சூறாவளி காற்று இருக்கும்.   அடுத்த 48 மணி நேரத்தில் இந்த சூறாவளி காற்றானது மேற்கு நோக்கி செல்லும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும், கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவானதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிக மழை பெய்யும்.

இன்று தொடங்கி  வரும் 31ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.



குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 33 டிகிரி செல்சியஸ் மற்றும் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று முதல் பலத்த மழை பெய்யும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, காரைக்கால், நெல்லை,  தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டனர்.



திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுகை மாவட்டங்களில் அதிகாலை 3 மணி முதல், கரூர், நாகை மாவட்டங்களில் அதிகாலை 4 மணி முதல், மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணி முதல், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அதிகாலை முதல் விடிய விடிய மிதமான மழை பொழிந்தது. இன்று பகலிலும் மழை நீடித்தது.

மழை காரணமாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, திருவோணம் பகுதிகளில் சுமார் 4,000 ஏக்கரில் நடவு செய்து 10 நாட்களான சம்பா பயிர் மழை நீரில் மூழ்கியுள்ளது. பல இடங்களில் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து வருகின்றன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இன்று காலையிலும் மழை நீடித்ததால், கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். ரெயின்கோட், குடை உதவியுடன் அவர்கள் அவதிப்பட்டு சென்றனர்.

டெல்டா மாவட்டங்களில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மிமீ) வருமாறு: திருவாரூர் 80. 6, நன்னிலம் 52. 8, பாண்டவையாறு 25. 6, முத்துப்பேட்டை 20 மி. மீ அளவில் மழை பெய்துள்ளது. தொடர் மழை பெய்து வருவதால், தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


.

மூலக்கதை