கீழடியில் அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நாளை மரியாதை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கீழடியில் அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நாளை மரியாதை

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், இன்று காலை சென்னையில் இருந்து மதுரை சென்றார். நாளை காலை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்துகிறார்.

முன்னதாக, இன்று மதியம் சிவகங்கை மாவட்டம் கீழடி சென்ற அவர், அங்கு  அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்டார். தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்தாண்டு தேவர் குருபூஜை விழா நாளை (30ம் தேதி) நடக்கிறது.

இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் 11. 30 மணிக்கு புறப்பட்டு பகல் 12. 30 மணிக்கு மதுரை சென்றடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடிக்கு சென்ற முதல்வர், அங்கு நடந்து வரும் அகழ்வாய்வு பணிகளை இன்று மதியம் 1. 15 மணிக்கு பார்வையிட்டார்.

தற்போது வரை நடந்துள்ள அகழாய்வு பணிகள் குறித்து,  அதிகாரிகளுடன் அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். பின்னர் மதுரை வந்த அவர், அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

பின்னர் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மதுரை-தொண்டி சுற்றுச்சாலை சந்திப்பில் பல்வழிச் சாலை மேம்பாலப் பணிகளை பார்வையிடுகிறார்.

தொடர்ந்து மாலை 5. 30 மணிக்கு மதுரை குருவிக்காரன் சாலையில் நடந்து வரும் மேம்பாலப் பணிகள், வைகை ஆற்றின் கரையில் பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, மரக்கன்றுகளை நடுகிறார். மாலை 6 மணிக்கு மதுரையில் புது நத்தம் சாலையில் கலைஞர் நினைவு நூலகம் அமைய உள்ள பகுதியை முதல்வர் மு. க. ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

இதையடுத்து, இன்று இரவு மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

மீண்டும் நாளை காலை 7. 30 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதல்வர் மு. க. ஸ்டாலின், காலை 7. 45 மணிக்கு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். தொடர்ந்து தெப்பக்குளத்தில் மருது சகோதர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு செல்லும் முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை காலை 9. 15 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்துகிறார்.

அவருடன் தமிழக அமைச்சர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் மதுரை வந்து, மதியம் 1. 30 மணிக்கு சென்னைக்கு புறப்படுகிறார். முதல்வர் வருகையையொட்டி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


.

மூலக்கதை