9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில் டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில் டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அமைச்சர் கே. என். நேரு மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019 டிசம்பரில் நடந்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பிரச்னை காரணமாக அப்போது தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த மாவட்டங்களில் அக்டோபருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியான பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை 12ம் தேதி நடந்தது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஜனவரிக்குள் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

இதன்படி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தேர்தலை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் இறங்கி உள்ளது.

இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதனால் அந்தந்த மாவட்டங்களில் மின்னணு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.

மேலும் மண்டல வாரியாக ஆய்வு கூட்டங்களை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நடத்தி வருகிறார். நேற்று திருச்சியில் மண்டல ஆய்வுகூட்டம் தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நேற்று நடந்தது.

இதில் தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூர், புதுகை உள்பட 8 மாவட்ட கலெக்டர்கள், கமிஷனர், எஸ்பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதனை வைத்து கொண்டு நவம்பர் 25ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் சவாலான இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (28ம் தேதி) காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தேர்தலை எப்போது, எந்த தேதியில் நடத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள், கொரோனா வழிகாட்டு நெறிமுறை வெளியிடுதல் குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை முடிவு செய்யும்.

தீபாவளி முடிந்து தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம், டிசம்பரில் வாக்குப்பதிவு இரு கட்டங்களாக நடத்தப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

.

மூலக்கதை