ஆலோசனை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து...அதிகாரிகள் தயாராக இருக்க கலெக்டர் அறிவுறுத்தல்

தினமலர்  தினமலர்
ஆலோசனை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து...அதிகாரிகள் தயாராக இருக்க கலெக்டர் அறிவுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசியதாவது;வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கவுள்ள சூழலில் நாம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி வருவாய்த்துறை, காவல்துறை, வேளாண் துறை, மீன்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள வேண்டும்.சுகாதாரத்துறை சார்பாக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட வளாகங்களில் தேவையற்ற இடர்பாடுகளுடன் கூடிய கட்டடங்களை அகற்றிட வேண்டும்.வடகிழக்கு பருவமழை காலத்தின்போது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்திடும் வகையில் தேவைக்கேற்ப ஜெனரேட்டர் வசதி உள்ள தனியார் மருத்துவமனைகளை கண்டறிந்து மழை நீரால் பாதிப்பு ஏற்படாத வகையில் ஜெனரேட்டர் வசதிகளை முதல் தளத்தில் அமைக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் அறிவுறுத்த வேண்டும்.மேலும், ஜெனரேட்டர் வசதியுடன் கூடிய தனியார் மருத்துவமனை வளாகங்களில் அவசர கால தேவைக்கேற்ப படுக்கை வசதி, உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருப்பில் உள்ளதை சுகாதாரத்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். சுகாதாரத்துறை சார்பாக இணை இயக்குநர் (நலப்பணிகள்) மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் மருத்துவர்களை அழைத்து வரவிருக்கின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.

இதில், அந்தந்த மருத்துவமனை நிர்வாகம் அவசர கால தேவைக்கேற்ப பாம்பு மற்றும் தேள் கடி போன்ற உயிர் காக்கும் மருந்து உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும். பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுடைய தலைமையாசிரியர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி பள்ளி வளாகங்களில் தேவையற்ற இடர்பாடுகளுடன் கூடிய கட்டடங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பயன்படுத்தாத வண்ணம் பூட்டி சீலிடப்பட வேண்டும் அல்லது அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும், இடி, மழை மற்றும் மின்னல் போன்ற இயற்கை சீற்றம் ஏற்படும்போது அதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்த விளக்கமான வழிமுறைகளை ஒவ்வொரு தலைமையாசிரியரும் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை சுத்தப்படுத்திடவும், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வருவாய்த்துறை, காவல்துறை, வேளாண் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளின் அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த அரசு கட்டடங்கள் மற்றும் கட்டட வளாகங்களில் உள்ள பயனற்ற கட்டங்கள் மற்றும் பட்டு போன மரங்களை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

.மேலும், கட்டடங்களில் மின் கம்பிகளின் கட்டமைப்புகள் மழை காலத்தின்போது எவ்வித அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பதை நேரில் ஆய்வு மேற்கொண்டு சரிசெய்ய வேண்டும். அந்தந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்பு பணிகளில் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செயல்பட வேண்டும்.இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை பேசினார்.அப்போது, எஸ்.பி., ராதாகிருஷ்ணன், திண்டிவனம் சப் கலெக்டர் அனு மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மூலக்கதை