அதிகரிப்பு: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...கொரோனா தொற்று ஊரடங்கு எதிரொலி

தினமலர்  தினமலர்
அதிகரிப்பு: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...கொரோனா தொற்று ஊரடங்கு எதிரொலி

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு எதிரொலியாக, நிதி நெருக்கடியில் தவிக்கும் பெற்றோர்கள்,தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகள் நடக்கின்றன. ஊரடங்கால் தொழில்கள் முடங்கியதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் போதிய வருமானமின்றி தவிக்கின்றனர்.

தற்போது, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதால் பொருளாதார நெருக்கடியில் உள்ள பெற் றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.இதனால், சில பெற்றோர்கள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை, அருகிலுள்ள அரசு பள்ளிகளில் துவக்க நிலை வகுப்பு முதல் மேல் நிலை வகுப்புகளில் சேர்க்க துவங்கியுள்ளனர்.கடந்த 2019-2020ம் கல்வியாண்டை ஒப்பிடுகையில், 2020-2021ம் கல்வி ஆண்டில் மாவட்டத்தில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட அரசு துவக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இது குறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த கல்வியாண்டில் எல்.கே.ஜி., யில் 208 பேர், ஒன்றாம் வகுப்பில் 8,451, 6ம் வகுப்பில் 12 ஆயிரத்து 764, பிளஸ் 1 வகுப்பில் 9,755 பேர் உட்பட 31 ஆயிரத்து 170 பேர் சேர்ந்தனர்.ஆனால், கொரோனா தொற்று ஊரடங்கு எதிரொலியாக அரசுப் பள்ளிகளில் கடந்தாண்டை விட இந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதில், துவக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேற்று முன்தினம் நிலவரப்படி ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை 13 ஆயிரத்து 600 பேரும், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை 24 ஆயிரத்து 983 பேர் உட்பட 38 ஆயிரத்து 583 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர்.

வரும் 30ம் தேதி வரை, சேர்க்கை நடைபெறும் என்பதால் மாணவ, மாணவியரின் சேர்க்கை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.புதிதாக சேரும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை கல்வி மாவட்ட அலுவலகங்கள் மூலமாக பெற்றுக் கொள்ள வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

மூலக்கதை