உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு; தலைமறைவானதால் கதவை உடைத்து ஆவணங்கள் பறிமுதல்; சீல் வைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு; தலைமறைவானதால் கதவை உடைத்து ஆவணங்கள் பறிமுதல்; சீல் வைப்பு

அண்ணாநகர்: தொழிலாளர் நலத்துறையில் உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி தலைமறைவாகிவிட்டதால் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உடைத்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதுடன் வீட்டுக்கு சீல் வைத்தனர். சென்னை முகப்பேரை சேர்ந்தவர் பரதன்.

இவர் அப்பகுதியில் மின்னணு எடை எந்திர உதிரிபாகங்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது கடையின் தொழில் உரிமம் முடிந்துவிட்டதால் அவற்றை புதுப்பிக்க ஆன்லைனில் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் துறையிடம் கடந்த டிசம்பர் மாதம் விண்ணப்பித்தார்.

ஆனால் இதற்கு எந்த பதிலும் வரவில்லை என்றதும் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் ஜான் பிரகாஷை நேரில் சந்தித்து பரதன் விளக்கம் கேட்டுள்ளார்.

இதையடுத்து அவர், தொழிலாளர்துறை உதவி ஆணையர் வளர்மதிக்கு 10 ஆயிரம்  ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் உரிமம் புதுப்பிக்கும் விண்ணப்பத்தில் கையொப்பம் இடுவார் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பரதன், அதிகாரி வளர்மதியை சந்தித்து பேசியபோது அவரும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் விண்ணப்பத்தில் கையெழுத்திடுவேன் என்று கறாராக கூறியதாக தெரிகிறது. ஆனால் பரதன் பணம் கொடுக்க விரும்பவில்லை.

இதுகுறித்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு டி. எஸ். பி லவக்குமாரிடம் பரதன் புகார் செய்தார். இதன் அடிப்படையில், அதிகாரிகள் கொடுத்த தகவல்படி, உதவி ஆய்வாளர் ஜான் பிரகாஷை முதலில் தொடர்புகொண்ட பரதன், 10 ஆயிரம் ரூபாய் வைத்துள்ளேன்.

எங்கு வந்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஓரிரு நாளில் பணத்தை பெற்றுக்கொள்கிறேன் என்று அவர் கூறிய நிலையில், ஜான் பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்துக்கு ரவி என்பவர் பணியமர்த்தப்பட்டார்.



இதன்பிறகு ரவியை தொடர்புகொண்டபோது அவரும் பணம் கேட்டதாக தெரிகிறது. இதுபற்றி பரதன் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் ரவி மற்றும் உதவியாளர் முருகவேல் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டது அறிந்ததும் உதவி ஆணையர் வளர்மதி மாயமானார்.

இதையடுத்து சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள உதவி ஆணையர் வளர்மதி வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு டி. எஸ். பி லவக்குமார் தலைமையில் போலீசார் சென்றபோது அங்கு வளர்மதி இல்லை. இதையடுத்து அதிகாரியின் வீட்டின் கதவை உடைத்து சோதனை நடத்தியபோது முக்கிய ஆவணங்கள் கிடைத்தது.

இதனால் அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர்.

அதிகாரியை தேடி வருகின்றனர்.

.

மூலக்கதை