தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு பணி வழங்கியிருந்தனர். இந்த தொழிற்சாலை வேறு ஒரு நிர்வாகத்திற்கு மாறியதால் நிலம் கொடுத்து பணியில் அமர்த்தப்பட்ட விவசாயிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.


திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு அப்பகுதியை சேர்ந்த பல விவசாயிகள் நிலம் வழங்கியிருந்தனர்.

நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு பணி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொழிற்சாலை, வேறு ஒரு நிர்வாகத்திற்கு மாறியதால் நிலம் கொடுத்து பணியில் அமர்த்தப்பட்ட விவசாயிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.



இதையடுத்து பலமுறை வேலை வழங்கும்படி விவசாயிகள் முறையிட்டனர். ஆனால் வேலை வழங்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், மீண்டும் பணி வழங்க வேண்டும் அல்லது நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கூறி தொழிற்சாலை முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன், மணவாளநகர் இன்ஸ்பெக்டர் கண்ணையா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அப்போது, போராட்டக்கார்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கூறினர். அங்கிருந்து செல்லாததால் வாக்குவாதம் அதிகரித்தது.

திடீரென போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டக்காரர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை