தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு

சென்னை: தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாதத்திற்கான முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டது. விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இததையடுத்து தமிழகம் மற்றும் சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை  6 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாகவும், அரசின் குளறுபடியான நடவடிக்கைகளாலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்ைக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 2,51,738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 1,90,966 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4,034 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 1,00,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 86,301 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

2140 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 30ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் தொற்று அதிகமானதையடுத்து ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவித்தார்.

மேலும், ஜூலை மாதத்தில் கடைபிடிக்கப்பட்டது போலவே, ஆகஸ்டு மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். இதன்படி இன்று மற்றும் 9, 16, 23, 30ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.



ஏற்கனவே ஜூலை மாதத்தில் 4 நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 5வது ஞாயிற்றுக்கிழமையாக, ஆகஸ்டு மாதத்திற்கான முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கு நேரத்தில் தளர்வுகளுடன் அனுமதிக்கப்பட்ட காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி இல்லாததால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

பால், மருந்து கடைகள், பத்திரிகை விற்பனையகங்கள் மட்டும் வழக்கம் போல் இயங்கின. மேலும் அரசு அனுமதித்த பால், மருத்துவ பணிகள் சார்ந்த மற்றும் பத்திரிகை வாகனங்கள் மட்டும் சாலைகளில் ஓடின.

அந்த வாகனங்களையும் போலீசார் நிறுத்தி சோதனை செய்த பிறகு தான் அனுமதித்தனர். இதனால் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், சேலம், நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.



மருத்துவ தேவைக்கு தவிர வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று போலீசார் எச்சரித்து இருந்தனர். அதை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் முக்கிய சாலைகள் அனைத்திலும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னையின் முக்கிய சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற முக்கியமான சாலைகளில் 193 சோதனை சாவடி அமைத்து அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, நெல்லை, திருவண்ணாமலை, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற அனைத்து மாவட்டங்களில் இந்த முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது.



.

மூலக்கதை