சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான போலீஸ்காரர் முத்துராஜிடம் சிபிசிஐடி விடிய விடிய விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான போலீஸ்காரர் முத்துராஜிடம் சிபிசிஐடி விடிய விடிய விசாரணை

* திடுக் தகவல்கள் அம்பலம்: கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் முத்துராஜிடம் சிபிசிஐடி போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதில் அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்துக்கட்சியினர், பிரபலங்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக வியாபாரிகள் இறந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்ெபக்டர் தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மற்றொரு போலீஸ்காரரான முத்துராஜ் அப்ரூவராக மாறியதாகவும், சிபிசிஐடி போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதாகவும் தகவல் பரவியது.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிபிசிஐடி ஐஜி சங்கர் இதை மறுத்தார். இந்நிலையில் நேற்றிரவு விளாத்திகுளம் அருகே பூசனூரில் உறவினருடன் பைக்கில் வந்த போலீஸ்காரர் முத்துராஜை விளாத்திகுளம் டிஎஸ்பி பீர்முகைதீன், இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் மடக்கி கைது செய்தனர்.

தொடர்ந்து தூத்துக்குடியில் சிபிசிஐடி போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். சிபிசிஐடி போலீசார் அவரிடம் விடியவிடிய தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட விதம், விசாரணையின் போது அவரை யார், யார் தாக்கினர்? சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தாக்குதல் நடந்த இடம், உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆகியவை குறித்து விவரித்ததாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை விசாரணை முடிந்ததும், அவரை உடல் பரிசோதனை செய்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் அவரை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி, தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

பிரண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை
சிபிசிஐடி ஐ. ஜி.

சங்கர் கூறியதாவது:சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம்.

எப்ஐஆர் என்பது முதல் தகவல் அறிக்கை மட்டும் தான். விசாரணையின் போக்கில் மேலும் குற்றவாளிகள் சேர்க்கப்படலாம்.

யாரையும் சிபிசிஐடி போலீசார் அப்ரூவராக மாற்ற முயற்சிக்கவில்லை. பெண் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒவ்வொருவராக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடும் விசாரணையில் இல்லை.

விசாரணை நேர்மையாகவும், நடுநிலையாகவும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையம் உள்ளிட்ட சில இடங்களின் சிசிடிவி பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நபர்கள் மீதும் புகார்கள் வந்துள்ளது.

அந்த நேரத்தில் பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை நடத்துவோம் என்றார்.

.

மூலக்கதை