விதிமுறைகளை பின்பற்றினால் வேண்டாமே வென்டிலேட்டர்! விரட்டலாம் கொரோனாவை!

தினமலர்  தினமலர்
விதிமுறைகளை பின்பற்றினால் வேண்டாமே வென்டிலேட்டர்! விரட்டலாம் கொரோனாவை!

கோவை:ஒரு மாதத்துக்கு முன், கோவை மக்களிடம் இருந்த, கொரோனா குறித்த அச்சம் இன்று இல்லை. சாலையில் செல்லும் பலர், மாஸ்க் அணியாமல் உள்ளனர். பஸ்களிலும், பொது இடங்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவது குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை பெறுவது குறித்து அறிந்தால், அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என்கிறார்கள் டாக்டர்கள்.
கோவையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் காரணமாக, வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் வசிக்கும் கோவையை சேர்ந்தவர்கள், விமானம் மற்றும் தனி வாகனங்கள் வாயிலாக, சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.அவ்வாறு வரும் பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது, கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், நோய்த்தொற்று குறைந்திருந்த கோவையில், பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.அதற்காக, வீடுகளில் பழையபடி முடங்கி கிடப்பது தீர்வாகாது.
பாதுகாப்பு வழிமுறைகளை ஒவ்வொருவரும் பின்பற்றுவதே புத்திசாலித்தனம்.அலட்சியம் காட்டுபவர்கள் ஒவ்வொருவரும், மருத்துவமனை வென்டிலேட்டரில் சிகிச்சை பெறுவது குறித்து அறிந்தால், நிச்சயம் அரசின் விதிமுறைகளை பின்பற்றுவர் என்கிறார், கோவை அரசு மருத்துவமனையின், பொது மருத்துவத்துறை பேராசிரியர் சாமிநாதன்.இதோ, வென்டிலேட்டர் சிகிச்சை குறித்து, அவர் கூறிய சில முக்கிய தகவல்கள்:n கொரோனா பாதிப்புடன் அபாய கட்டத்தில் இருப்பவர்களுக்கு, ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை, செயற்கை சுவாச கருவி எனப்படும் வென்டிலேட்டர் தேவைப்படும்.
சுவாச உறுப்பான நுரையீரலானது, சரியாக ஆக்ஸிஜனை உள்ளே இழுத்து, ரத்தத்துக்கு கொடுக்க முடியாமல் போகும் சமயங்களில், வென்டிலேட்டர் பயன்படுத்தப்படுகிறது.n சிகிச்சையின் போது பேசவோ, சாப்பிடவோ, ஏன் இயற்கை உபாதைகளை கூட கழிக்க முடியாது.n சர்க்கரை, ரத்தம், சிறுநீரகம், புற்றுநோய், புற்றுநோய் மற்றும் உறுப்பு மாற்று செய்து, சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு, நுரையீரல் சற்று பலவீனமாகதான் இருக்கும். அவர்களை கொரோனா பாதித்தால், வென்டிலேட்டர் உதவி அவசியமாகிறது.
நோயாளிகளுக்கு வென்டிலேட்டரின் டியூப்களை, மூக்கு அல்லது வாய் வழியாக செலுத்தி, மூச்சு குழாயில் பொருத்தப்படுவதால்,உணவு உண்ண முடியாது.n திரவ உணவு மட்டும் குழாய் வழியாக செலுத்தப்படும். நோயாளிகளுக்கு உணர்வு வந்து விட்டால், மூச்சுக்குழாயில் பொருத்தப்பட்டிருக்கும், டியூப்பை பிடித்து இழுத்து கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் துாக்க நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக, அதற்கான ஊசி போடப்படும். நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, படிப்படியாக ஆக்ஸிஜன் செலுத்தும் திறனை குறைத்து, பின்னரே வென்டிலேட்டரில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.ஆகவே, அதுபோன்ற வலி மிகுந்த, கொடுமையான அனுபவங்களை சந்திக்காமல் இருக்க, இன்று முதலாவது அனைவரும், அரசின் விதிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்புடன் இருப்போம்.

மூலக்கதை