டிவியில் பிரதமர் 5 முறை பேசியும் ஆக்கப்பூர்வ நடவடிக்கை இல்லை: திருநாவுக்கரசர் எம்பி சாடல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிவியில் பிரதமர் 5 முறை பேசியும் ஆக்கப்பூர்வ நடவடிக்கை இல்லை: திருநாவுக்கரசர் எம்பி சாடல்

தென்காசி: டிவியில் பிரதமர் மோடி 5 முறை பேசியும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எம். பி. சாடினார்.

இதுகுறித்து தென்காசி அடுத்த மேலகரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியது: தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் நிவாரணம் வழங்கி வருகின்றன.

மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்கள் கணக்கிலும் ரூ. 10,000 அல்லது ரூ. 7,500 வரவு வைக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு ரூ. 15,000 கோடிதான் செலவாகும். அரசின் வருவாய் ரூ. 3 லட்சம் கோடியாக உள்ளது.



டிவியில் பிரதமர் நரேந்திரமோடி 5 முறை பேசியும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால், இதன்பலன் என்பது நீண்ட காலம் கழித்தே தெரியவரும். தற்போதுள்ள சூழலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.

சோனியா, ராகுல் உள்ளிட்டோர் இதையே வலியுறுத்தி வருகின்றனர். நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவதோடு சம்பளத்தை இரு மடங்காகவும் உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை