சீக்கிரம் ரெடியாயிரும்! காய்கறி, பழங்கள் விற்பனை:விவசாயிகள் அதீத நம்பிக்கை

தினமலர்  தினமலர்
சீக்கிரம் ரெடியாயிரும்! காய்கறி, பழங்கள் விற்பனை:விவசாயிகள் அதீத நம்பிக்கை

கோவை:வரும் 8ம் தேதி முதல் ஓட்டல்கள் மீண்டும் செயல்படவுள்ளதால், காய்கறி, பழங்கள் விற்பனை மெள்ள சீராகும் என்ற நம்பிக்கையுடன், காத்திருக்கின்றனர் வியாபாரிகளும், விவசாயிகளும்.ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு வருவதால், கோவையில் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. திருமணம், நிச்சயதார்த்தம், காது குத்து, கோவில் கும்பாபிஷேகம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு போன்ற, சுப நிகழ்ச்சிகளுக்கு கெடுபிடி நீடிக்கிறது. நிகழ்ச்சிகள் நடந்தாலும், குறைந்த நபர்கள் மட்டுமே பங்கேற்க முடிகிறது.
பெரியளவில் உணவு சமைப்பது குறைந்து விட்டது. ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதனால் காய்கறி, பழங்களின் தேவை, வெகுவாக குறைந்து விட்டது. உள்ளூர் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இவற்றின் முடக்கம், சிறுக சிறுக சீராகி வருகிறது.
கோவை மாவட்ட மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் அஜிஸ் கூறுகையில், ''கோவையில் தற்போது, எம்.ஜி.ஆர்., மார்க்கெட் மட்டுமே முழுமையாக செயல்படுகிறது. அண்ணா மார்க்கெட், ராமலிங்கசெட்டியார் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்காலிக மார்க்கெட்களில், குறைந்த எண்ணிக்கையிலான கடைகளே செயல்பட்டு வருகின்றன.சுபநிகழ்ச்சிகளை நடத்த கட்டுப்பாடுகள் இருப்பதால், காய்கறி விற்பனை குறைந்து விட்டது. இதனால், விற்பனைக்கு தேவையான அளவே காய்கறி, பழங்களை கொள்முதல் செய்து வருகிறோம். அதிலும், பாதிதான் விற்பனை ஆகிறது. அழுகிய காய்கறி, குப்பைத் தொட்டிக்கு செல்கிறது. வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார். கொரோனாவுக்கு முன் கோவையில் இருந்து, ஏராளமான காய்கறி கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தது.
தற்போது, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், கத்தரிக்காய், அரசாணிக்காய், பூசணிக்காய், தக்காளி மட்டுமே அனுப்பப்படுகிறது.வரும் 8ம் தேதி ஓட்டல்கள் திறந்து விட்டால், நிலைமை ஓரளவுக்கு சீராகி விடும் என்று நம்புகின்றனர் வியாபாரிகள். சிறுக, சிறுக அனைத்தும் சீராகும்.
நம்பிக்கையுடன் நகர்த்துவோம் நாட்களை!
'வீணாகிறது விவசாயிகளின் உழைப்பு' ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி கூறுகையில், ''சுப நிகழ்ச்சிகளுக்கு காய்கறி, வாழைப்பழம், பூ, இலை போன்ற பொருட்களின் விற்பனை அதிகமாக இருக்கும். ஊரடங்கால், விற்பனை குறைந்து பழங்கள், காய்கறி அழுகி வீணாகிறது. பச்சை மிளகாயை பறிக்க, ரூ.20 ஆள் கூலி கொடுக்கப்படுகிறது. ஆனால், சந்தையில் பத்து ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது. இப்படி சந்தையில் விற்பனை ஆகாமல், தக்காளி, முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், வெண்டைக்காய், கத்திரிக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறி அதிகம் வீணாகின்றன. விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது,'' என்றார்.

மூலக்கதை