கொரோனா 2வது அலையால் தமிழகத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா 2வது அலையால் தமிழகத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை அவசர ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அது எதிர்பார்த்த அளவிற்கு பலனளிக்கவில்லை.

இதனால், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500, முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு இதுபோன்ற பல்வேறு நடைமுறைகளை அறிமுகப்படுத்தினாலும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்தபாடில்லை.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 7,819 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்று இது 8 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 2,564 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் 772 பேர், கோவையில் 540 பேர், திருவள்ளூரில் 383 பேர், தூத்துக்குடியில் 244 பேர், திருப்பூர் 225, திருச்சி 216, மதுரையில் 199 பேர், திருநெல்வேலி 193, சேலத்தில் 175 பேர் என பாதிப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் தொற்றின் வேகம் அதிகரித்தவாறு உள்ளது.

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, திருச்சி, மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.

இந்த மாவட்டங்களில் தினம் தோறும் அதிகரிக்கும் தொற்றை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறைக்கு சிக்கல் எழுந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் நிரம்பி வழிகிறது. ஒருவர் குணமாகி வீடு திரும்பினால் மட்டுமே அடுத்தவருக்கு படுக்கை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

இதனால், புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்களை உடனடியாக உள்நோயாளிகளாக சேர்த்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. மூச்சுத்திணறல் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்படுவார்கள், மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை அளித்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

அதேபோன்று தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் கிடைக்காமல் கொரோனா நோய் பாதித்தவர்கள் செய்வறியாது திகைத்து வருகிறார்கள்.

இதுபோன்று, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு அதிகாரிகள் திகைத்து போய் உள்ளனர். அதேநேரம் இனி தமிழகத்தில் ஊரடங்கு அறிவித்தால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை காலை சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில், தற்போது உள்ள சூழலில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதே நேரம் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் தொற்றை கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட உள்ளது.

மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வலியுறுத்துவது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.

அதேநேரம், கொரோனா தொற்று குறைவான மாவட்டங்களிலும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்காமல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது, தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்துவது, காய்ச்சல் முகாம் மற்றும் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

.

மூலக்கதை