இந்திய கம்யூனிஸ்ட், பாஜ வேட்பாளர்களுக்கு கொரோனா

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய கம்யூனிஸ்ட், பாஜ வேட்பாளர்களுக்கு கொரோனா

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் ரவி (எ) சுப்ரமணியம் மற்றும் அரவக்குறிச்சி பாஜ வேட்பாளர் அண்ணாமலை ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. திருப்பூர் வடக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி (எ) சுப்ரமணியம் (64) போட்டியிட்டார்.

இவர் தேர்தலின்போது, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், கட்சி பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவருக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ளது.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இவர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, பிரசாரத்துக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜ வேட்பாளர் தமிழக பாரதிய ஜனதா கட்சி துணைத்தலைவர் அண்ணாமலை. இவர் தமிழக சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்டார்.

இவர் கடந்த ஒரு மாதமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். இந்நிலையில் நேற்று இரவு கோவையில் இருந்த அண்ணாமலைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

.

மூலக்கதை