மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் நாளை திமுகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம்; 10 ஆண்டு தொலைநோக்கு திட்டம் வெளியீடு: ‘தமிழக வளர்ச்சிக்கான வழிகாட்டி’ என அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் நாளை திமுகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம்; 10 ஆண்டு தொலைநோக்கு திட்டம் வெளியீடு: ‘தமிழக வளர்ச்சிக்கான வழிகாட்டி’ என அறிவிப்பு

திருச்சி: ‘‘விடியலுக்கான முழக்கம்’’ என்ற பெயரில் திருச்சி சிறுகனூரில் நாளை திமுக சார்பில் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் மாநாடு போல் பிரமாண்டமாக நடக்கிறது. இதில், தமிழகத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு. க. ஸ்டாலின் அறிவிக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் 11வது மாநில மாநாடு மார்ச் 14ம் தேதி திருச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக சிறுகனூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வந்தன. இந்தநிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அதே இடத்தில் பிரமாண்ட தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டமாக மார்ச் 7ம் தேதி (நாளை) நடத்த முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் மாநாடு போல் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இதற்காக சுமார் 750 ஏக்கரில் பொதுக்கூட்ட இடம் தயாராகி வருகிறது. இதில் வாகனங்கள் நிறுத்த மட்டும் 400 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.

350 ஏக்கரில் கூட்டம் நடைபெற உள்ளது. அருகருகே தனித்தனியாக 3 மேடைகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

இதில்  ஒரு மேடையில் மு. க. ஸ்டாலின் இருப்பார் என்றும், மற்ற மேடைகளில் கட்சியின்  தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இருப்பார்கள் என்றும்  கூறப்படுகிறது. மேடைகளின் இருபுறங்களிலும் தலா 300 மீட்டர் நீளத்தில் எல்இடி திரைகள் பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது.

நுழைவுவாயிலில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி 100 அடி உயரத்தில் பிரமாண்ட கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. மேலும், நுழைவாயிலில் தொண்டர்களுக்கு திமுக தொப்பி, பேட்ஜ், டீசர்ட்டுகள்  வழங்க 10 ஸ்டால்களும், மதியம் வெரைட்டி உணவுகள் வழங்க 15 மினி ஸ்டால்கள் என  25 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

பகலை இரவாக்கும் வகையில் மின்  கம்பங்கள் நிறுவி, அதில் மின் விளக்குகள் பொருத்தும் பணியும், தொண்டர்கள்  அமர நாற்காலிகள் வைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இப்பணிகளில்  சுமார் 5,000 தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து  பணிகளும் இன்று மாலைக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொண்டர்கள் அமர மட்டும் சுமார் 10 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. எனவே, தமிழகம் முழுவதுமிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து நாளை காலை 11 மணியளவில் விமானத்தில் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் கே. என். நேரு தலைமையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

சிறிது நேர ஓய்வுக்கு பின் மதியம் 1 மணியளவில் ஸ்டாலின், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகிறார்.

அங்கு நுழைவு வாயிலில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைக்கிறார்.

மதியம் 2 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. திமுகவின் முன்னணி தலைவர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள்.

இரவு 7 மணியளவில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்திற்குப் புது வாழ்வு தரும் திட்டங்களை முன்வைக்கும் வகையிலும் லட்சியப் பிரகடனம் ஒன்று, திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்தப் பிரகடனத்தின் இரண்டு முக்கிய அம்சங்களில் ஒன்று, தமிழக வளர்ச்சிக்கான ஏழு முக்கிய வழிகாட்டுதலை விளக்குதல்.

மற்றொன்று, தமிழகத்திற்கான தொலைநோக்குத் திட்ட ஆவணம் வெளியிடுதல். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டைக் கவனமுடன் கட்டமைப்பதற்கான திமுகவின் மாபெரும் திட்ட அறிக்கையாக இது அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஸ்டாலின் தொலைநோக்கு திட்ட அறிக்கையை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார். கூட்டம் முடிந்ததும் இரவே ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

திமுக தேர்தல் சிறப்பு பொதுக்கூட்ட ஏற்பாடுகளால் திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.

10ல் வேட்பாளர் பட்டியல்
11ல் தேர்தல் அறிக்கை
12ல் 6ம் கட்ட பிரசாரம்
திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்தது. இதில் மு. க. ஸ்டாலின் பேசுகையில், ‘‘வருகிற 10ம் ேததி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

மறுநாள் 11ம் தேதி, திமுகவின் தேர்தல் அறிக்கை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை, சட்டமன்றத் தேர்தலில் கதாநாயகனாக விளங்கும்.

தமிழக மக்களின் மனங்களைக் கவரும் என்று மு. க. ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து 12ம் தேதி முதல் மு. க. ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலம் 6வது கட்ட பிரசாரத்தை துவக்குகிறார்.

.

மூலக்கதை