'ஸ்மார்ட் ரோடு' பணிகளில்...தாமதம்! பொதுமக்கள் கடும் அவதி

தினமலர்  தினமலர்
ஸ்மார்ட் ரோடு பணிகளில்...தாமதம்! பொதுமக்கள் கடும் அவதி

திருப்பூர்:குமார் நகர், 60 அடி ரோட்டில், 'ஸ்மார்ட் ரோடு' பணியில் தாமதம் நீடிப்பதால், அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், 9.26 கோடி ரூபாய் மதிப்பில், குமார் நகர் 60 அடி ரோடு, ஸ்மார்ட் ரோடாக அமைக்கப்படுகிறது.
அவிநாசி ரோடு சிக்னல் சந்திப்பில் இருந்து, பி.என்., ரோடு வரை, ஆயிரத்து 20 மீட்டர் துாரத்துக்கு 'ஸ்மார்ட் ரோடு' அமைக்கும் பணி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன் துவங்கியது.ரோட்டின் ஒரு புறம் மட்டும், ரோடு அமைக்கும் பணி நடந்த நிலையில், மறுபுறம் குழிகள் மட்டும் தோண்டப்பட்டு, அப்படியே விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பணி நடக்காத நிலையில், இவ்வழியாக வாகனங்கள் சென்றுவருவது தடைபட்டுள்ளது. நகரின் மையப்பகுதியில் உள்ள இவ்வழித்தடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவரும் நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களை கடுமையாக பாதிக்க செய்கிறது.
இவ்வழியில், எலும்பு முறிவு, காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு, நுரையீரல், சிறுநீரக சிகிச்சை உள்ளிட்ட, மருத்துவமனைகள் உள்ளன. இம்மருத்துவமனைகளுக்கு தினமும் நோயாளிகள் இவ்வழித்தடம் வழியாக வந்து செல்ல வேண்டிய நிலையில், நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆங்காங்கே பெரிய குழிகளும், பள்ளங்களும் தோண்டப்பட்டு இருப்பதால், டூவீலர்கள் கூட வர முடியாத நிலையில், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ஆம்புலன்ஸ் போன்ற பெரிய வாகனங்கள் வந்து செல்ல முடியாத அவலம் நீடிக்கிறது.இது குறித்து, மாநகராட்சி அதிகாரி கூறுகையில், 'குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக, ரோடு அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை குழாய் மூடி பகுதிகளும் சேதமடைந்துள்ளதால், அவற்றையும் சரிசெய்ய வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் மட்டுமே, பணி மேற்கொள்ள போலீசார் அனுமதிக்கின்றனர். எனவே, பணியில் தாமதம் நீடிக்கிறது. விரைவில், பணியை முடித்து விடுவோம்,' என்றார்.

மூலக்கதை