நடுநிலையோடு பணியாற்றுங்கள்: அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்

தினமலர்  தினமலர்
நடுநிலையோடு பணியாற்றுங்கள்: அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்

விழுப்புரம்: சட்டசபை தேர்தல் பணியில் நடுநிலையோடு செயல்படுமாறு அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

சட்டசபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:சட்டசபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. அனைத்துத் துறை அலுவலர்களும் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி நடுநிலையோடு பணியாற்ற வேண்டும்.அரசு அலுவலகங்கள் மற்றும் பொது பயன்பாட்டில் உள்ள கட்டடங்களில் பிரதமர், முதல்வர் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் மற்றும் காலண்டர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு ஒதுக்கீடு செய்த அரசு வாகனங்களை திரும்ப பெற வேண்டும். நெடுஞ்சாலை, பொதுப்பணி துறை அலுவலர்கள் தங்கள் கட்டுபாட்டில் உள்ள சுற்றுலா மாளிகைகள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகங்களை பூட்டி அந்தந்த பகுதி தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியின்றி புதிதாக நிதி அளிப்பதோ, பணி நடப்பதோ அல்லது பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்படக்கூடாது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் முன், பணிக்கான ஆணை வழங்கி இருந்தாலும், பணி துவங்காமல் இருந்தால், அந்த பணிகளை துவங்கக்கூடாது.முன்பே துவங்கிய திட்டங்களின் புதிதாக அரசு நலத்திட்ட உதவிகள் ஏதும் வழங்கக்கூடாது.நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொது கட்டடம், வீடுகளிலும், மேலும் கிராம அரசு கட்டடங்களில் எழுதிய சுவர் விளம்பரங்கள், விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும்.நெடுஞ்சாலை துறை கட்டுபாட்டில் உள்ள பாலங்களில் எழுதிய விளம்பரங்கள் முழுமையாக அகற்ற வேண்டும். கிராமங்களில் இடத்தின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று சுவர் விளம்பர் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு இடத்தில் உள்ள கொடி கம்பங்களில் கொடிகளை அகற்ற வேண்டும்.தேர்தல் ஆணைய நன்னடத்தை விதிமுறைகளை கடைபிடித்து தேர்தல் பணிகளை நடுநிலையோடு பணியாற்றிட அறிவுறுத்தினார்.கூட்டத்தில் சப்-கலெக்டர் அனு, ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மூலக்கதை