இன்று 73வது பிறந்த நாள் ஜெயலலிதா சிலைக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று 73வது பிறந்த நாள் ஜெயலலிதா சிலைக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளையொட்டி சென்னையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு இன்று 73வது பிறந்த நாள்.

இதையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகளான கே. பி. முனுசாமி, வைத்திலிங்கம், மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் கட்சி வளாகத்தில் கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் கட்சி அலுவலகத்தில் 73 கிலோ கேக்கை இபிஎஸ், ஓபிஎஸ் வெட்டி இருவரும் மாறி மாறி ஊட்டி கொண்டனர்.

அதிமுக நிர்வாகிகளுக்கும் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா பிறந்த நாள் விழா மலரை இபிஎஸ், ஓபிஎஸ் வெளியிட்டனர்.

அதிமுக தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். விழாவை முன்னிட்டு, கட்சி அலுவலகத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கூடியிருந்தனர்.

அப்பகுதி முழுவதும் அதிமுக கொடி மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. இதேபோன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதா படத்தை அலங்கரித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக கொடியேற்றப்பட்டு தொண்டர்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளையும் அதிமுகவினர் வழங்கினர்.

ஜெயலலிதா, எம்ஜிஆர் நடித்த படங்களின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.

.

மூலக்கதை