‘பகல் வேஷம் போடும் ஓபிஎஸ் பரதனா?’ திருச்சியில் மார்ச் 14ல் திமுக மாநில மாநாடு: தேனியில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘பகல் வேஷம் போடும் ஓபிஎஸ் பரதனா?’ திருச்சியில் மார்ச் 14ல் திமுக மாநில மாநாடு: தேனியில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உத்தமபாளையம்: திமுகவின் 11வது மாநில மாநாடு திருச்சியில் மார்ச் 14ம் தேதி நடைபெறும் என திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மு. க. ஸ்டாலின் மேடைக்கு வந்த போது, பெண்கள், முதியவர்கள் அவரை கைதட்டி வரவேற்றனர். பெண்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து பொதுமக்கள் அளித்த மனுவை அவர் பெற்றுக் கொண்டார். அவர்களுடன் கலந்துரையாடிய மு. க. ஸ்டாலின், அவர்களது குறைகளை கேட்டறிந்து, பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: நீண்ட கால பிரச்சினைகளை எல்லாம் என்னிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இங்கு வந்துள்ளீர்கள்.   மிகப் பெரிய அன்பே அடுத்தவரின் நம்பிக்கையைப் பெறுவது தான்.

உங்களுக்காக நான் நூறு சதவீதம் உண்மையாக இருப்பேன். இன்னும் மூன்று மாதத்தில் உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் திமுக ஆட்சி வந்தவுடன் தீர்க்கப்படும்.

வாக்குறுதிகளை நிச்சயமாக நான் நிறைவேற்றுவேன். மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்.

மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் முதல்வராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு சொந்தமானது தேனி.

ஆனால் இவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் உரிமையை நிலைநாட்டவில்லை.

பிடிஆர் கால்வாய் திட்டத்தை நீட்டிப்பேன் என்று கூறினார். அதையும் செய்யவில்லை.

கிராமங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. உண்மையாகச் சொல்லப்போனால் ஓபிஎஸ் ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருந்ததில்லை.

ஓபிஎஸ் தர்மயுத்தம்  நடத்தியபோது ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தீர்க்கப்படும் என்றார். ஆனால் இன்னும் தீர்க்கவில்லை.

சசிகலாவுக்கும் உண்மையாக அவர் இருந்ததில்லை முதல்வர் பழனிச்சாமிக்கு உண்மையாக இருந்ததில்லை. பரதன் பெயரைச் சொல்லி பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார்.

இவர் பரதன் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர் பகல் வேஷம் போடுகிறார்.



போடி தொகுதியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண் ஒருவர் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு ஒரு வார்த்தை சொல்லி விட்டார் அவர் சொன்ன வார்த்தை உடனடியாக நான் வாபஸ் பெற வேண்டும் என்று சொன்னேன் ஆனால் பன்னீர்செல்வம் அந்த குடும்பத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டு அவர்கள் மீது வழக்கு போட்டுள்ளார். இதுதான் பன்னீர்செல்வத்தின் ஜனநாயகம்.

கடந்த 2002ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் ஒன்றை எழுதினார். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக ஓபிஎஸ் இருந்தார்.   அந்த துறையின் மந்தமான செயல்பாடு காரணமாக மத்திய அரசு இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளவிலலை என்று எழுதினார்.

ஓபிஎஸ் உண்மையிலேயே நிர்வாகத்திறமை அற்றவர். பன்னீர்செல்வம் ஆவியோடு பேசுவார்.

இந்த மாவட்ட மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார். தனது நலனில் மட்டுமே அக்கறை கொண்டவர் அவர்.

வெற்றி முகட்டை எட்டும் பணியில் முக்கிய அங்கமாக வரும் மார்ச் 14ம்  திருச்சியில் திமுகவின் 11-வது மாநில மாநாடு நடைபெறும். கடந்த 1956ம் ஆண்டு திருச்சியில் திமுகவின் 2வது மாநில மாநாடு நடந்தது.

1990ல் 6வது மாநாடும், 1996ல் 8வது மாநாடும் நடந்தது. கடந்த 2006ம் ஆண்டு 9வது மாநாடு, 2014ம் ஆண்டு 10வது மாநாடு என திருச்சியில் தொடர்ந்து மாநாடு நடந்துள்ளது.

அந்த வகையில் கட்சியின் 11வது மாநாடும் வரும் மார்ச் 14ல் திருச்சியில் நடைபெறும் இவ்வாறு  மு. க. ஸ்டாலின் பேசினார்.

.

மூலக்கதை