'பள்ளிக்கு திரும்பினோம்; பரவசமானோம்!' மாணவ, மாணவியர் புத்துணர்வு

தினமலர்  தினமலர்
பள்ளிக்கு திரும்பினோம்; பரவசமானோம்! மாணவ, மாணவியர் புத்துணர்வு

திருப்பூர்:கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், உற்சாகம் பொங்க, பள்ளிகளுக்கு வந்தனர்.திருப்பூர் கல்வி மாவட்டத்தில் - 180 பள்ளிகள், பல்லடம் -75, தாராபுரம் - 82, உடுமலை - 63 என, 400 அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளிகளில், பத்து மாதங்களுக்கு பிறகு நேற்று முதல், பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் செயல்படத் துவங்கின.
மாணவர்கள் முக கவசம் அணிந்தபடி காலை, 8:30 மணி முதலே பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்தனர். நுழைவாயிலில் மாணவரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. கைகளை சானிடைசர் மற்றும் சோப்பு கொண்டு சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.அனைத்து மாணவர்களும் பெற்றோரின் கையெழுத்து பெற்ற ஒப்புதல் கடிதத்தை உடன் எடுத்து வந்தனர். தானியங்கி தெர்மல் ஸ்கேனர், சானிடைசர் தெளிப்பான் போன்ற அதிநவீன இயந்திரங்கள் அரசு பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தது. முக கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
வகுப்புக்கு, 10 - 25 மாணவர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள், வழிமுறைகள் அச்சடித்து வழங்கப்பட்டன.பல மாதங்களுக்கு பின் பள்ளி திறக்கப்பட்டதால், மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.'பள்ளிக்கு நாங்கள் திரும்பியிருப்பதை பரவசத்துடனும், புத்துணர்வுடனும் உணர்கிறோம்' என்று மாணவ,மாணவியர் உற்சாகத்துடன் கூறினர்.
கட்டாயம் இல்லை
சி.இ.ஓ., ரமேஷ் கூறுகையில், ''சளி, இருமல், காய்ச்சல் மற்றும் இதர உடல் உபாதைகள் அறிகுறிகள் இருப்பின் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியது அவசியமில்லை.வகுப்பாசிரியரிடம் தகவல் தெரிவித்தால் போதும். குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இத்தகைய காரணங்களுக்காக சிகிச்சை பெற்று வந்தாலே, தொற்று அறிகுறிகள் இருந்தாலோ மாணவர்கள் வீட்டிலே இருக்கலாம்.உரிய தகவலை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். மாணவர்களை பள்ளி வரச்சொல்லி ஆசிரியர்களும் கட்டாயப்படுத்தக்கூடாது'' என்றார்.

மூலக்கதை