கோயம்பேடு அருகே அதிகாலை பயங்கரம் சொகுசு கார் மோதி ஆயுதப்படை காவலர் பலி: மற்றொரு காவலர் உயிர் ஊசல்: கார் டிரைவர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோயம்பேடு அருகே அதிகாலை பயங்கரம் சொகுசு கார் மோதி ஆயுதப்படை காவலர் பலி: மற்றொரு காவலர் உயிர் ஊசல்: கார் டிரைவர் கைது

அண்ணா நகர்: கோயம்பேடு அருகே பாதுகாப்பு பணிக்கு சென்ற ஆயுதப்படை காவலர்களின் பைக்  மீது சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.

விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர்  கைது செய்யப்பட்டார்.   ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  ரவீந்திரன் (32). இவருடைய நண்பர் உடுமலைப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (34).

பரங்கிமலை ஆயுதப்படை  காவலர்கள். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் பட்டாலியனிலிருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.   ஆவடி சிவசக்தி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில், கோயம்பேடு பேருந்து நிலைய பாதுகாப்பு பணிக்காக  இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.

திருமங்கலம் கலெக்டர் நகர் சிக்னல் அருகே வந்தபோது,  அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்.

இதில், காவலர் ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.   கார்த்திக் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக  சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து, இறந்த ரவீந்திரன் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுநர் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த அம்ரத் (25) என்பவரை கைது செய்தனர்.  

முதற்கட்ட விசாரணையில், காரில் கல்லூரி மாணவர்கள்  உள்பட 4 பேர் வந்துள்ளனர்.

இவர்கள், சென்னை கே. கே. நகரில் உள்ள தனது நண்பர் ரோகித் சூர்யாவின் பிறந்தநாள் விழா கொண்டாடிவிட்டு நொளம்பூரில் உள்ள வருண் சேகர் வீட்டுக்கு  வேகமாக சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.   அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவாக,  சொகுசு காரில் வந்து விபத்து ஏற்படுத்தும் நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் தயக்கம்காட்டி பேசி அனுப்பிவிடுவது  குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை