தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (வயது 70) காலமானார்.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (வயது 70) காலமானார்.

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வுகளின் முன்னோடியாக திகழ்ந்தவர் தொ.ப. எனும் பேராசிரியர் தொ. பரமசிவன். பண்பாடு, சமயங்கள் தொடர்பான ஆய்வுகளை விரிவாக மேற்கொண்டவர்.

திராவிட சிந்தனைகளுடன் கூடிய ஆய்வு முறையை கையாண்டவர் தொ. பரமசிவன். தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ஆவணப்படுத்தியவர் பேராசிரியர் தொ.பரமசிவன்.


மதுரை அழகர் கோவில் தொடர்பான தொ.பரமசிவத்தின் ஆய்வு நூல் இன்றளவும் கோவில் ஆய்வு நூல்களில் கொண்டாடப்படக் கூடிய ஆகச் சிறந்த நூலாகும். மதுரை தியாகராசா கல்லூரி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக பணிபுரிந்தவர் தொ. பரமசிவன். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றினார். அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம், சமயங்களின் அரசியல், விடு பூக்கள், உரைகல், இந்துதேசியம், நாள்மலர்கள், மானுடவாசிப்பு, பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் தொ. பரமசிவன். உடல்நலக் குறைவால் பாளையங்கோட்டையில் இன்று இரவு தொ. பரமசிவன் காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கும் ஆய்வு உலகத்துக்கும் மிகப் பெரிய பேரிழப்பாக்கும். மார்க்சிய, பெரியாரிய சிந்தனைகளை உள்வாங்கி தமிழ் மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்க வேண்டும் என நீண்ட நெடும் பாடத்தை தன்வாழ்நாள் எல்லாம் நடத்திக் கொண்டே இருந்தவர் மறைந்த பேராசிரியர் தொ. பரமசிவன்.

பெரியார் மறைந்த நாளிலேயே மறைந்திருக்கிறார். "நாற்பதாண்டு காலமாகத் தமிழ் பண்பாட்டு ஆய்வில் ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கி உழைத்தவர் .கல்வெட்டுச்சான்றுகள்,தொல்பொருள் ஆதாரங்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே வரலாற்றை ஆராய்வதை விட்டுப் பண்பாட்டு வரலாற்றை அடித்தள மக்களின் வாழ்வு முறையிலிருந்தும் நம்பிக்கை மற்றும் அவர்களின் சடங்குகளிலிருந்தும் எழுதுபவர் தொ.பரமசிவன்"என்று பாராட்டப்பெற்றவர்.'திராவிடக் கருத்தியல் ஒரு நிருபிக்கப்பட்ட உண்மை ' என்று முழங்கியவர்.மதுரை யாதவர் கல்லூரி,மதுரை தியாகராசர் கலைக் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியவர் .பல்கலைக்கழகங்களில் பல பேர் முனைவர் பட்டம் பெறுவதற்கு நெறியாளராக இருந்தவர் என்பது மட்டுமல்ல, மற்ற நெறியாளர்களிடம் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆராய்ச்சி செய்த பலருக்கும் கருத்து உதவிகள் செய்தவர்.

 

ஐயாவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்..


திமுக தலைவர் திரு.ஸ்டாலின் :
"தமிழறிஞர் - ஆய்வாளர் - தமிழர்களின் மரபியல் குறித்துப் பல நூல்களைத் தந்த படைப்பாளர் - பெரியாரிய, மார்க்சிய சிந்தனையாளர் திரு. தொ.பரமசிவன் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழர்களின் பண்பாடு எத்தகைய தனித்துவமானது என்பதையும், குறிப்பாக நாட்டார் வழக்காற்றியல் குறித்தும் பல கட்டுரைகளையும், பேட்டிகளையும் வழங்கியுள்ள தொ.பரமசிவன் அவர்கள், திராவிட இயக்கமும் பெரியாரும் இந்த மண்ணில் ஏற்படுத்தியுள்ள அரசியல் - சமூக - பண்பாட்டுத் தாக்கங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தவர்.

தந்தை பெரியார் நினைவு நாளில் தொ.ப. அவர்களும் மறைவெய்தியுள்ளார். அவரது மறைவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழார்வலர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் வாழ்வுரிமை கட்சித்தலைவர் திரு.வேல்முருகன்
தமிழறிஞர் தொ.பரமசிவம் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல்: தமிழ் நாட்டார் வழக்கியலின் ஆகப் பெரும் பொக்கிஷம், தமிழின் தொன்ம வரலாற்றினை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்திட உடல் நலிவுற்ற தன் இறுதி காலத்திலும் அயராது உழைத்திட்ட அய்யா திரு.தொ.பரமசிவன். அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அய்யா அவர்கள் தமிழர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருப்பார். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான்
சென்னை: தமிழ் பேரறிஞர் 'பெருந்தமிழர்' பேராசிரியர் தொ. பரமசிவன் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: முதுபெரும் தமிழறிஞரும், மகத்தான வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வாளருமான எனது பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், மற்றும் உறவுகள் துயரில் நானும் ஒருவனாய்ப் பங்கெடுக்கிறேன்.

எளிய கிராமத்தில் பிறந்த என்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்குக் கல்வியை மட்டுமல்லாது, தமிழுணர்வையும், மானுடச்சிந்தனையையும், சமூகப்பார்வையையும் அளித்த மகத்தான மாமனிதராவார். சமயங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்து அவர் நிகழ்த்தியிருக்கிற ஆய்வுகள் தமிழின அறிவுலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடிக் கண்டறிந்து ஆவணப்படுத்தி அவர் எழுதி இருக்கின்ற அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற பல நூல்கள் தமிழினத்திற்கு அவர் வழங்கி இருக்கின்ற மகத்தான பெருங்கொடைகளாகும். இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக அவர் பணிபுரிந்த போது அவருடைய மாணவனாகப் பயின்ற அனுபவங்கள் மறக்க முடியாதவை. அவரால்தான் நான் உருவானேன். என் பேச்சில், என் எழுத்தில் என என் வாழ்வின் சகல விதத்திலும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய எனது பேராசிரியர் மறைந்துவிட்டார் எனும் செய்தி ஏற்கவே முடியாத பெருந்துயரமாக மாறி, என்னை வாட்டுகிறது. நாம் தமிழர் என்கின்ற பெரும்படையை நாங்கள் கட்டியெழுப்பியபோது எங்களுக்கு வகுப்பெடுத்து வழிகாட்டிய பெருந்தகை அவர். மதுரை தியாகராயர் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி எண்ணற்ற அறிஞர்களை, ஆய்வாளர்களை உருவாக்கிய பேரறிஞராவார். கடினமான ஆய்வு நூல்களைக்கூட எளிய தமிழில் சொல்லக்கூடிய அவரைப் போன்ற ஒரு மகத்தான எழுத்தாளுமை யாரும் இல்லை.

அவருடைய இழப்புத் தனிப்பட்ட அளவில் என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இன்றளவும் எனக்கு வழிகாட்டிக்கொண்டிருந்த ஒரு ஒளி அணைந்து விட்டதே? என்று கலங்கி நிற்கும் வேளையிலும் அவர் நம்மிடம் விட்டுச்சென்றுள்ள காலத்தால் அழியாத அவரது ஆய்வு நூல்களும் அவர் கற்பித்த பாடங்களும் இன்னும் பல தலைமுறைகளுக்குத் தமிழினத்தை வழிநடத்திச்செல்லும் என்ற பேருண்மை நம்பிக்கையுடன் மீண்டெழ வைக்கிறது. ஐயாவின் மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கும் ‌மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்குமானப் பேரிழப்பாகும். உரிய அரசு மரியாதையோடு ஐயாவின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

பெருந்தமிழர் நமது ஐயா தொ.பரமசிவன் அவர்களின் பெயர் தமிழினம் உள்ளவரை, தமிழ்மொழி வாழும் வரை மங்காத அறிவுப்பேரொளியாகச் சுடர்விடும். என் விழி முழுவதும் நிறைந்திருக்கின்ற கண்ணீரோடு என் பேராசிரியரின் பேரன்பிற்கு நன்றிப்பெருக்கோடு புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் :

தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர். தொ. பரமசிவன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுகளிலும், தமிழகத்தின் தொன்மையைப் புதிய கோணத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததிலும் மறக்கமுடியாத பணியாற்றியவர். இவை தொடர்பாக பேராசிரியர் பரமசிவன் அவர்கள் ஆராய்ந்து கண்டறிந்த தகவல்களும், எழுதிய நூல்களும் என்றைக்கும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும். அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சித்தமருத்துவர் கு.சிவராமன்
தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை, பட்டுக் குஞ்சங்களை விலக்கி, பாமர வாழ்வியலில் இருந்து விளக்கிச் சொல்லும் ஒரு மாபெரும் வரலாற்று ஆசானை இழந்து விட்டோம்.
சித்த மருத்துவத்தை சிவபெருமான் - நந்தி தேவர் - சைவ சித்தாந்தம் என்ற ஒரே நேர்கோட்டில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பல ஆய்வாளர்களை சமணத்துக்குள்ளே, குலதெய்வ மரபுக்குள்ளே, திணைக் கோட்பாட்டுக்குள்ளே எட்டிப் பார்த்து யோசிக்க வைத்த நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியர் அவர்.
"பண்பாட்டு அசைவுகள்" நூல் என்னைப் போல பலருக்கும் ஒரு புதிய திறவுகோல். கடைசியாய் நான் அவர் எழுதிய "பாளையங்கோட்டை வரலாறு" நூலை வாசித்தபோது, என் ஊர் தாமிரவருணி நதியைத்தாண்டி, காலகாலமாய் எத்தனை ஆளுமைகள் ஒடிச் செழித்த ஊர் என நான் திமிர் கொண்டது உண்மை.
நேற்று காலையில்தான் மனுஷ்ய புத்திரனின் கருணாவிற்கான நினைவுக் கவியை வாசித்து நெகிழ்ந்திருந்தேன். அந்த கவிதையின் கடைசி வரி இந்த ஆசானுக்கும் பொருந்தும்.
"ஒவ்வொரு ஆட்டத்திலும்
யாரோ முக்கியமான ஒருத்தன் இல்லாமல்
ஒரு கை குறைவாக
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
ரொம்ப நாள்
இப்படியே ஆடமுடியாது சார்
முன் வரிசை ஆட்டக்காரர்கள்
சாகக்கூடாது என தடை விதியுங்கள்"
-மனுஷ்ய புத்திரன்
தமிழ் உலகின் ஒரு காலமானார் பேரா. தொ.அவர்கள். அன்னாரின் மறைவிற்கும் அவர் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும் ஏராளமான மாணாக்கர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

பேராசிரியர் ச.மாடசாமி

அருமை நண்பர். மூட்டா இயக்கத்தில் உயிருக்குயிராய் இணைந்திருந்தோம். ஒவ்வொரு போராட்டத்திலும் உடனிருப்பார். அடிப்படையில் ஒரு போராளி!பின்னர் நெல்லைப் பல்கலைக் கழகத்தில் வேறு வேறு துறைகளில் சேர்ந்து பணியாற்றினோம். பக்கத்துப் பக்கத்து அறைகளில் இருந்தோம்.தினசரி சந்திப்பு இருந்தது. அப்போது தமிழகம் அறிந்த பண்பாட்டுச் சிந்தனையாளர் அவர். எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மையின் வடிவம் அவர்.ஒருபோதும் மறக்கமுடியாத நண்பர் தொ.பரமசிவன். அவருடைய மரணம் தாங்கமுடியாத பேரதிர்ச்சி!....

பேராசிரியர் மு.இளங்கோவன்
பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் மறைவு!
அறியப்படாத தமிழகம் என்னும் நூலின் வழியாக ஆய்வுலகத்திற்குப் பெரும் பங்களிப்பு நல்கிய பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் இயற்கை எய்திய செய்தியறிந்து, நண்பர்களைப் போல் நானும் பெருங்கவலையுற்றேன். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களை முனைவர் நாக. கணேசன்(அமெரிக்கா) அவர்களுடன் 07.06.2008 இல் நெல்லையில் சந்தித்து உரையாடியுள்ளேன். பேராசிரியர் தொ.ப. அவர்களுடன் ஆதிச்சநல்லூருக்குச் சென்றமையும், அவர் எனக்கு வழங்கிய ஒரு அகல்விளக்கினைப் பெற்றுக்கொண்டமையும் இன்றும் என் மனக்கண்ணில் உள்ளது. தமிழர் பண்பாடு குறித்து ஆழமாக ஆராய்ந்த பெருமகனாரை இழந்துள்ளமை தமிழுக்குப் பேரிழப்பாகும். அவரின் ஆய்வுத் தடத்தைத் தொடர்வது அவருக்குச் செய்யும் சிறப்பாக இருக்கும். தொ.ப. புகழ் என்றும் நின்று நிலவும்.
படம்: ஆதிச்சநல்லூரில் தொ.ப. எனக்கு அகல் விளக்கு ஒன்றைப் பரிசாக வழங்கல்(07.06.2008).

தொடர்புடைய பதிவுகள்:
http://muelangovan.blogspot.com/2008/06/1.html
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_9550.html
http://muelangovan.blogspot.com/2008/06/2.html
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_20.html

சென்னை பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை
இந்த ஆண்டு இழப்புகளின் ஆண்டாய் அமைந்துவிட்டது. தொடர்ச்சியான துயரங்கள்; ஈடுகட்ட முடியாத பேரிழப்புகள்.
பண்பாட்டு ஆய்வுகளில் புதிய வெளிச்சம் பாய்ச்சிய அறிஞர் தொ. பரமசிவன் இப்போது நம்மிடையே இல்லை. அவரின் ஆய்வுகள் பல ஆய்வாளர்களுக்கும் முன்னோடியாக இருப்பவை; பண்பாட்டின் அசைவுகளைப் படம் பிடித்துக் காட்டியவை. இந்த இழப்புகளை எப்படி ஈடுசெய்யப் போகிறோம்! தான் பெரிதும் நேசித்த, பின்பற்றிய தந்தை பெரியாரின் நினைவு நாளிலேயே தொ.ப அவர்களும் மறைந்து விட்டார்.
அறிஞர் தொ. பரமசிவன் அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்!


திரு.செந்தில் ஆறுமுகம் , சட்டப்பஞ்சாயத்து இயக்கம்
பெரியாரைப் போற்றிய தொ.பரம”சிவன்” ஐயா
அவர்கள் வைகுண்ட ஏகாதசி நாளிலும், பெரியார் நினைவுநாளிலும் மறைகிறார்..!!
காலத்தின் கணக்குகள் வித்தியாசமானவை..!!
”அறியப்படாத தமிழகத்தை” எழுதியவர், தமிழகம் அதிகம் அறியப்படாதவராக அமரராகிறார்..!!
புத்தகங்களை மட்டும் படித்து வரலாற்றை எழுதாமல் மக்களைப் படித்து வரலாற்றை வடித்தவர் விடைபெறுகிறார்..!!
தமிழறிஞர்-வரலாற்று அறிஞர்-மானுடவியல் ஆய்வாளர்- தொ.பரமசிவன் மறைவு - இரங்கல்..!!

 

மூலக்கதை