பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல்

* பல இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது
* பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பல இடங்களில் பாமகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பெருங்களத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் ரயில் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் எதிரே இளைஞர் அணி தலைவர் அன்புமணி, கட்சியின் தலைவர் ஜி. கே. மணி ஆகியோரது தலைமையில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.



இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று பாமக அறிவித்தது.

மன்றோ சிலை அருகே பாமகவினர் கூடும்படி அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், வேலூர், திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பாமகவினர், வாகனங்களில் கட்சி கொடிகளை கட்டி கொண்டு இன்று காலை சென்னை நோக்கி வந்தனர்.



அதேநேரத்தில், மாநில துணை பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் பாமகவினர் வந்த சில வாகனங்களை செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த பாமகவினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் கைது செய்து செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.



அங்கும் வாகனங்களை நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் விடுவித்தனர்.

பல்வேறு நிபந்தனைகளுடன் வாகனங்களை சென்னைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த மறியலால் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் புலிப்பாக்கம் அருகே நிறுத்தப்பட்டது.

பயணிகள், சுமார் 3 கிமீ தூரம் நடந்து செங்கல்பட்டு பஸ் நிலையத்துக்கு சென்றனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை அதிகாலை 5. 30 மணிக்கு பெருங்களத்தூர் அடுத்த இரணியம்மன் கோயில் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த வாகனங்கள் பல கிமீ தூரம் நின்றது.



அதேபோல சென்னையில் இருந்து வந்த வாகனங்களும் ஆங்காங்கே நின்றது. தகவலறிந்து கூடுதல் ஆணையர் தினகரன், தெற்கு இணை ஆணையர் ஏ. ஜி. பாபு, பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. அப்போது சிலர், பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.



அந்த நேரத்தில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரயில் வந்தது. இந்த ரயிலை நிறுத்தி போராட்டம் நடந்தது.

சிறிது நேரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். போராட்டக்காரர்களை பார்த்ததும் ரயில் நிறுத்தப்பட்டது.

அந்த ரயில் மீது கற்களை சரமாரியாக எடுத்து வீசினர். இதனால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

பின்னர் தண்டவாளத்தில் கட்டைகளை போட்டு போராட்டம் செய்தனர். போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



இதையடுத்து அங்கிருந்து கலைத்து சென்றனர். அரை மணி நேரம் கழித்து ரயில் புறப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து சேலையூர் காவல் நிலையம் அருகே உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்தனர். இதனால் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொள்ள தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சென்னைக்கு வருவார்கள் என தெரிந்தும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

அதேநேரத்தில், சென்னைக்குள் நுழையும் அனைத்து இடங்களிலும் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனச் சோதனை நடத்தினர். கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, துரைப்பாக்கம், பெருங்களத்தூர், போரூர், பூந்தமல்லி, திருவொற்றியூர், மாதவரம் ஆகிய இடங்களில் போலீசார் வாகனச் சோதனை நடத்தினர்.

சென்னை போராட்டத்துக்கு சென்ற சுமார் 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர் மின்னல் மகேஷ் தலைமையில் திருப்பாச்சூர் பிரபா, திருவலாங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் திருவாலங்காடு, பூண்டி, ஆர். கே. பேட்டை பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வாகனங்களில் புறப்பட்டனர்.



பட்டறைபெருமந்தூர் சுங்கச்சாவடி அருகே 100க்கும் மேற்பட்ட பாமகவினரை, திருத்தணி டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்து திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதேபோல, திண்டிவனம், குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களிலும் பாமகவினரை போலீசார் மறித்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர்.

.

மூலக்கதை