புயல் கடந்து இரண்டு நாட்களாகியும் கடலூர் குடியிருப்புகளில் வடியாத மழை நீர்

தினமலர்  தினமலர்
புயல் கடந்து இரண்டு நாட்களாகியும் கடலூர் குடியிருப்புகளில் வடியாத மழை நீர்

கடலுார் : 'நிவர்' புயல் கடந்து இரண்டு நாட்களாகியும் கடலுார் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்களுக்கு நோய் அச்சம் ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் காரணமாக 24ம் தேதி நள்ளிரவில் துவங்கி, புயல் கரையை கடந்த 26ம் காலை வரையில் கன மழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தில் 29 செ.மீ., மழை பெய்ததால், கடலுார் நகர சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி, 5000த்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளி நீர் சூழ்ந்தது.சாலையில் விழுந்த மரங்கள் அகற்றம், மின் கம்பங்கள் சீரமைப்பு, குடியிருப்புகளில் புகுந்த மழை நீர் வெளியேற்றம், சுகாதரப்பணிகள் என, மீட்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை, திருச்சி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி என பல மாவட்டங்களிலிருந்து வந்த நகராட்சி ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். போதிய வடிகால் வசதி யின்றி, 2000த்திற்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் தண்ணீர் வெளியேற்ற முடியாமல் வீடுகளை சூழ்ந்துள்ளது.

குறிப்பாக முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம் காமராஜர் நகர், விஜிய லட்சுமி, சிவானந்தம் நகர், பத்மாவதி, வில்வநகர் ஆனந்தம் நகர், திருப்பாதிரிபுலியூர் தானம் நகர், கேன். என்.பேட்டை, முதுநகர் சுனாமி நகர், சுத்துக்குளம், பனங்காட்டு காலனி, பீமாராவ் நகர், பச்சையாங்குப்பம், வண்ணாரபாளையம், வண்டிப்பாளையம் பகுதிகளில் தொடர்ந்து மழை நீர் தேங்கி, குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடலுார் நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வராமல், தண்ணீர் வடிய வழியின்றி நகராட்சி மூலம் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணி நடக்கிறது.

மூலக்கதை