மழை, வெயிலில் சேதமாகாது; பர்சில் வைத்து செல்லலாம் பாதுகாப்பு அம்சங்களுடன் ஆதார் பிளாஸ்டிக் கார்டு: ரூ.50 செலுத்தினால் வீட்டுக்கே வரும்

தினகரன்  தினகரன்
மழை, வெயிலில் சேதமாகாது; பர்சில் வைத்து செல்லலாம் பாதுகாப்பு அம்சங்களுடன் ஆதார் பிளாஸ்டிக் கார்டு: ரூ.50 செலுத்தினால் வீட்டுக்கே வரும்

புதுடெல்லி: ஆதார் அட்டையை பிளாஸ்டிக் (பிவிசி) கார்டு வடிவத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உதய் (UIDAI) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதை ஸ்கேன் செய்து, ஆதார் எண்ணை பரிசோதிக்கும் நவீன பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதுவரை வழங்கப்பட்டு வரும் ஆதார் அட்டை நீளமானதாக எளிதில் சேதமடையக் கூடிய வகையில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் அவசியம் இருந்தால் மட்டுமே ஆதார் அட்டையை எடுத்துச் செல்கின்றனர். மற்றபடி அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டி உள்ளது. இந்நிலையில், உதய் நிறுவனம் ஆதார் அட்டையை புதிய பிவிசி கார்டு வடிவத்தில் வெளியிட்டுள்ளது. இது ஏடிஎம் அட்டை போன்று கையடக்கமாக உள்ளதால் எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்லலாம். இது குறித்து உதய் நிறுவனம் தனது டிவிட்டர் பதிவில், ‘புதிய ஆதார் பிவிசி அட்டையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஆப்லைனிலும் இதை உடனடியாக பரிசோதித்து பார்க்க முடியும்,’ என குறிப்பிட்டுள்ளது. புதிய பிவிசி ஆதார் அட்டையின் சிறப்பம்சங்கள்:*  லேமினேசன் செய்யப்பட்டது. தகவல்கள் மிகத் தெளிவாக பிரிண்ட் செய்யப்பட்டுள்ளன.* பிவிசி அட்டையில் உள்ள க்யூஆர் கோடை ஆப்லைனிலும் ஸ்கேன் செய்து, ஆதார் சரியானதா என பரிசோதிக்க முடியும். எனவே, எந்த இடத்திலும் இந்த அட்டையை முக்கிய சான்றாக பயன்படுத்தலாம்.* இது முழுக்க முமுக்க பாதுகாப்பானது. மழை, வெயில் எந்த சூழலிலும் சேதமடையாது. ஏடிஎம் அட்டை போல இதையும் பர்சிலேயே எளிதில் வைத்து எடுத்துச் செல்லலாம்.* பாதுகாப்பு காரணங்களுக்காக, அட்டை பிரிண்ட் செய்த தேதி மற்றும் வழங்கப்பட்ட தேதி இடம் பெற்றிருக்கும். * ஆதார் லோகோவும் இடம் பெற்றிருக்கும். எனவே, இந்த பிவிசி ஆதார் அட்டை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என உதய் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த புதிய பிவிசி ஆதார் அட்டை பெறுவதற்கான கட்டணம் ரூ.50 மட்டுமே. இதில் ஜிஎஸ்டி, ஸ்பீட் போஸ்ட் கட்டணமும் உள்ளடங்கும். பிவிசி அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.எப்படி வாங்குவது?* உதய் இணையதளத்தில் ‘மை ஆதார்’ பிரிவில் சென்றால் ‘ஆர்டர் ஆதார் பிவிசி’ என்ற புதிய இணைப்பு தரப்பட்டுள்ளது. * அதில் சென்று 12 இலக்கு ஆதார் எண் அல்லது 16 இலக்க விர்சுவல் ஐடி அல்லது 28 இலக்க என்ரோல்மென்ட் ஐடி மற்றும் பாதுகாப்பு கோடு பதிவிட வேண்டும்.* ஒருவேளை உங்கள் மொபைல் போன் எண் பதிவு செய்யப்படவில்லை எனில் அதற்கான பாக்சில் டிக் செய்து, பதிவு செய்யாத அல்லது புதிய மொபைல் நம்பரை தர வேண்டும்.* பின்னர், ‘சென்ட் ஓடிபி’யை கிளிக் செய்ய ஒருமுறை கடவுச்சொல் கிடைக்கப்பெறும். அதை பதிவிட்டு, ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி பிவிசி அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.* விண்ணப்பித்ததும் 28 இலக்க சர்வீஸ் கோரிக்கை எண் (எஸ்ஆர்என்) எஸ்எம்எஸ் மூலம் வழங்கப்படும். அதை வைத்து பிவிசி அட்டையின் நிலை குறித்து ஆன்லைனில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

மூலக்கதை