தீவிரம்!உள்ளாட்சி தேர்தல் பணி முன்னேற்பாடு...அதிகாரிகளை நியமிக்கும் பணி ஜரூர்

தினமலர்  தினமலர்
தீவிரம்!உள்ளாட்சி தேர்தல் பணி முன்னேற்பாடு...அதிகாரிகளை நியமிக்கும் பணி ஜரூர்

கடலுார்:விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், கடலுார் மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசியல் கட்சியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடலுார் மாவட்டத்தில் இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 9,89,780 பேரும், பெண் வாக்காளர்கள் 10,10,543 பேரும், திருநங்கைகள் 118 பேர் என மொத்தம் 20,00,441 பேர் உள்ளனர்.உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர்கள், பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்தல் அறிவிப்பு விரைவில் வரவுள்ளதால், மாவட்ட நிர்வாகம் இதற்கான பணியை தீவிரப்படுத்தி வருகிறது. ஊராட்சி பகுதிகளில் 2,888 ஓட்டுச்சாவடிகளும், நகர் புறத்தில் 657 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 207 ஆண் ஓட்டுச்சாவடிகள், 207 பெண் ஓட்டுச்சாவடிகள் , 3,131 ஓட்டுச்சாவடிகள் என மொத்தம் 3,545 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பதட்டமான, மிக பதட்டமான ஓட்டுச்சாவடிகள் குறித்து அறியப்பட்டுள்ளது.மாவட்டத்தில் 29 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 683 ஊராட்சி தலைவர்கள், 5,040 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 287 ஒன்றிய உறுப்பினர்கள், 258 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், 174 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 5 நகராட்சி தலைவர்கள், 16 பேரூராட்சி தலைவர்கள் என மொத்தம் 6,492 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தேர்தல் மனு பெறவும், தேர்தலை நடத்தவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு 6 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 29 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றியத்திற்கு 14 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 49 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஊராட்சிகளுக்கு 14 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 117 உதவி தேர்தல் அலுவலர்கள், பேரூராட்சிக்கு 16 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 32 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நகராட்சிக்கு 5 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 21 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் ஜரூராக நடந்து வருகிறது.

மூலக்கதை