வெப்ப சலனம் நீடிப்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெப்ப சலனம் நீடிப்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வெப்ப சலனம் நீடித்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான புல்புல் புயல் மேற்கு வங்கம் அருகே நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்தது.

இதனால் வங்கக் கடல் பகுதியில் தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது.   தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் நிலவுவதால் வெப்ப சலனம் நீடித்து  வருகிறது. அதனால், பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காரணமாக மழை பெய்யவில்லை. அதற்கு மாறாக வெயில் நிலவி வருகிறது.

குறிப்பாக சென்னையை பொறுத்தவரை வழக்கத்து மாறாக கோடை காலத்தை போன்று பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.

இதனால் வீடுகளில் ஏற்படும் புழுக்கத்தால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இவ்வாறு வெயில் நிலவி வருவதால் வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் தெற்கு மற்றும்  வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதுதவிர கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை  பெய்யும்.

எனவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை