ஐப்பசி பவுர்ணமியையொட்டி கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் 100 மூட்டை அரிசியால் அன்னாபிஷேகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐப்பசி பவுர்ணமியையொட்டி கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் 100 மூட்டை அரிசியால் அன்னாபிஷேகம்

ஜெயங்கொண்டம்: சிவன் கோயில்களில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். சிவன் மீது சாத்தப்பட்ட அன்னத்தை சிறப்பு பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

இந்தாண்டுக்கான அன்னாபிஷேகம் இன்று (திங்கள்) நடக்கிறது. டெல்டா மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அன்னாபிஷேகம் சிறப்புவாய்ந்ததாகும்.

இங்கு அன்னாபிஷேகம் நடைபெறுவதையொட்டி நேற்று மகாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் பதிமூன்றரை அடி உயரம், 62 அடி சுற்றளவு கொண்ட பிரமாண்டமானதாகும். இந்த லிங்கத்திற்கு இன்று 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் நடக்கிறது.

இதற்கான பணி இன்று காலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதற்காக பாய்லரில் சாதம் சமைக்கப்பட்டு லிங்கத்தின் மீது சாத்தப்பட்டது.



லிங்கத்தின் மீது சாத்தப்படும் அன்னம் ஒவ்வொன்றும் ஒரு லிங்கமாக பக்தர்களால் போற்றப்பட்டு வணங்கப்படுகிறது. எனவே, இங்கு அன்னாபிஷேக விழாவில் லிங்கத்தை தரிசிப்பது ஒரே நேரத்தில் பலகோடி சிவனை தரிசித்த பலனைத்தரும் என்பது நம்பிக்கை.

எனவே ஏராளமான பக்தர்கள் காலை முதல் இங்கு வரத்தொடங்கினர். லிங்கம் மீது சாத்தப்பட்ட சாதம் மாலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இன்று மாலை 6. 45மணிக்கு தான் பவுர்ணமி துவங்குவதால் அதன்பிறகு தான் சாதம் சாத்தப்பட்ட லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதன் பின்னர் இரவில் அன்னதானம் நடைபெறும். சாதம் மீதமிருந்தால், அவை கிணறு, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் வீசப்படும். இதன் மூலம் அங்குள்ள மீன்களுக்கு உணவு கிடைப்பதுடன், அந்த நீர்நிலைகளும்செழிக்கும் என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

தஞ்சைபெரிய கோயிலில் நாளை (செவ்வாய்) அன்னாபிஷேகம் நடக்கிறது.

.

மூலக்கதை