ஊருக்கு போறீங்களா? வீட்டில் தண்ணீரை காலி செய்யுங்க:'டெங்கு' கொசு உற்பத்தி தடுக்க 'அட்வைஸ்'

தினமலர்  தினமலர்
ஊருக்கு போறீங்களா? வீட்டில் தண்ணீரை காலி செய்யுங்க:டெங்கு கொசு உற்பத்தி தடுக்க அட்வைஸ்

திருப்பூர்:தீபாவளிக்கு வெளியூர் செல்வோர், வீட்டில் உள்ள தண்ணீரை காலி செய்து வைத்து, டெங்கு கொசு உற்பத்தியாகாமல் பாதுகாக்க வேண்டும் என, மாநகராட்சியினர் அறிவுறுத்தி உள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுவால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் வகையில், தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அனைத்து வார்டுகளிலும் 300 வீடுகளுக்கு ஒரு கொசு தடுப்பு ஊழியர் என்றளவில், 500 பேர் நியமித்து பணியாற்றி வருகின்றனர்.
கொசு உற்பத்தியாகும் இடம் கண்டறிந்து அபேட் மருந்து தெளித்தல் மற்றும் கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் நில வேம்பு கஷாயம் வழங்குதல், மருத்துவ முகாம் நடத்தி, காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்வோர், தங்கள் வீடுகளில் பாத்திரங்களில் சேமித்து வைத்துள்ள தண்ணீரை காலி செய்து, கொசு உற்பத்தியாகாத வகையில் ஒத்துழைக்க வேண்டும்.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் கூறுகையில், ''கொசு உற்பத்திக்கு காரணமான வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில், குடிநீர் இணைப்பு துண்டிப்பதோடு, அபராதமும் விதிக்கப்படும். டெங்கு தடுப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.
கண்காணிப்பு தீவிரம்
மாநகராட்சி கமிஷனர், நகர் நல அலுவலர் பூபதி மற்றும் அதிகாரிகள் குழு நேற்று முதல் மண்டலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ முகாம், தீவிர துப்புரவு பணி மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.திருப்பூர், காந்தி நகரில் உள்ள ஏ.வி.பி., பள்ளியில் நடந்த சுகாதார விழிப்புணர்வு முகாமில், மாணவ, மாணவியருக்குடெங்கு கொசு மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது.

மூலக்கதை