வீட்டுக்கு வந்து மிரட்டி லஞ்சம் வாங்கிய போலீசார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீட்டுக்கு வந்து மிரட்டி லஞ்சம் வாங்கிய போலீசார்

புதுக்கோட்டை: ஏடிஎம் மோசடி வழக்கில் புதுகை பெண்ணை கைது செய்த போலீசார், அவர் மீது மேலும் வழக்கு போடாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என வீட்டுக்கே வந்து மிரட்டி உள்ளனர். ரூ. 20 ஆயிரம் மட்டும் லஞ்சம் கொடுத்ததால் அந்த பெண்ணை  மீண்டும் பிடித்து சென்று விட்டனர்.

தாயை விட்டுவிடும்படி கெஞ்சிய மகளை எஸ். ஐ. எட்டி உதைத்ததில் அவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராமர் (51), இவரது மனைவி சீதாலட்சுமி (42). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 8 வருடங்களாக இவர்கள் புதுக்கோட்டை சிவகாமி நகரில் குடியிருந்து வருகிறார்கள். ராமர் ரியல் எஸ்டேட் புரோக்கராக வேலை செய்து வருகிறார்.

சீதாலட்சுமி, அருப்புக்கோட்டையை சேர்ந்த உறவினரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மதுரையில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணம் சுருட்டியதாக அவர் மீது மதுரை திலகர் திடல் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சீதாலட்சுமியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

அதைத்தொடர்ந்து மேலும் 5 மோசடி வழக்குகளை சீதாலட்சுமி மீது திலகர் திடல் போலீசார் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சீதாலட்சுமி தினமும் திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் வெளியேவந்தார். நேற்று 2ம் நாளாக கையெழுத்து போட சீதாலட்சுமியும், கணவர் ராமரும் திலகர் திடல் போலீஸ் நிலையம் சென்றனர்.

கையெழுத்து போட்டதும் அங்குள்ள எஸ். ஐ. ஒருவர், ‘‘உன் மீது போடிநாயக்கனூரில் இருந்து மேலும் ஒரு மோசடி புகார் வந்துள்ளது.

அந்த புகார் மீதும் வழக்கு பதிவு செய்யப்போகிறோம். நீ இனிமேல் வெளியே வரமுடியாதபடி வழக்கு போட்டு விடுவோம்.

இதில் இருந்து நீ தப்பிக்க வேண்டுமானால் ரூ. 50 ஆயிரம் கொடு. உன்னை விடுவிக்கிறோம்’’ என பேரம் பேசி உள்ளனர்.

அதற்கு சீதாலட்சுமி, ‘‘ரூ. 20 ஆயிரம் வீட்டில் இருக்கிறது தருகிறேன்’’ எனக்கூறினார். இதையடுத்து, அந்த எஸ். ஐ, ஒரு ஆண், ஒரு பெண் போலீசார் மற்றும் சீதாலட்சுமி, அவரது கணவர் என 5 பேரும் தனியார் காரில் புதுக்கோட்டை வந்தனர்.

போலீசார் அனைவரும் மப்டியில் இருந்தனர். நேற்று மதியம் புதுக்கோட்டை வந்த போலீசார் சீதாலட்சுமி வீட்டுக்கு வந்து அங்கிருந்த ரூ. 20 ஆயிரத்தை வாங்கி கொண்டனர்.

மேலும், ‘‘ரூ. 30 ஆயிரத்தை புரட்டி கொண்டு வா, அப்போது தான் உன்னை விடுவோம்’’ எனக் கூறி உள்ளனர். அதற்கு அவர் பணம் யாரும் தரமாட்டார்கள் எனக்கூறி உள்ளார்.

ஆனால் போலீசார் 30 நிமிடத்திற்கு மேல் அங்கு இருந்து பணத்தை கொண்டு வா என மிரட்டிக்கொண்டிருந்தனர்.

இந்த தகவல் தெரிந்து அங்கு சென்ற அந்த பகுதி மக்கள், நீங்கள் யார், ஏன் பெண்ணை மிரட்டி பணம் கேட்கிறீர்கள் என கேட்டு உள்ளனர். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் மதுரை போலீஸ், எங்களைப்பற்றி மேலும் தெரியவேண்டுமானால் உங்கள் எஸ். பியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

அவரிடம் கூறி விட்டு தான் நாங்கள் வந்து இருக்கிறோம்’’ என கூறினார். மக்கள் கூட்டம் அதிகரிக்கவே, போலீசார் சீதாலட்சுமியை மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்.

அப்போது சீதாலட்சுமியின் 2வது மகள் வைஷ்ணவி (16) ஓடிச்சென்று எஸ். ஐயிடம் தனது தாயாரை விட்டு விடும்படி கெஞ்சினார். அவரை கீழே தள்ளிவிட்டு விட்டு காரில் சீதாலட்சுமியையும் அழைத்து சென்று விட்டார்.

எஸ். ஐ தள்ளி விட்டதில் காயமடைந்த வைஷ்ணவி புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ராமர் நேற்று புதுகை எஸ். பி. ஆபீசில் புகார் செய்ய சென்று உள்ளார்.

அங்கிருந்த அதிகாரிகள் இது குறித்து டவுன் போலீசில் புகார் செய்யும்படி கூறி உள்ளனர். டவுன் போலீஸ் நிலையம் சென்றபோது, சம்பவம் நடந்த இடம் திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது எனவே அங்கு போங்கள் என அலைக்கழித்து விட்டனர்.

இதனால் சோர்வடைந்த ராமர் வீட்டுக்கு வந்து விட்டார். இதற்கிடையே சீதாலட்சுமியை அழைத்து சென்ற எஸ். ஐ.

மீண்டும் போன் செய்து ரூ. 30 ஆயிரம் கொண்டு வராவிட்டால் மேலும் வழக்கில் உள்ளே தள்ளிவிடுவேன் என ராமரிடம் போனில் மிரட்டி உள்ளார்.

இதுதொடர்பாக, புதுகை மாவட்ட எஸ். பியிடம் விளக்கம் முயன்றபோது, அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

.

மூலக்கதை