தொலைதூர பஸ்களில் இடம் 'ஹவுஸ்புல்!' தீபாவளி பயணிகளுக்கு சிக்கல்

தினமலர்  தினமலர்
தொலைதூர பஸ்களில் இடம் ஹவுஸ்புல்! தீபாவளி பயணிகளுக்கு சிக்கல்

திருப்பூர்:திருப்பூரில் இருந்து சென்னை, நாகர்கோவில், திருநெல்வேலி, மார்த்தாண்டம், பெங்களூரு, திருப்பதி செல்லும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், விழுப்புரம் வழியாக சென்னைக்கு ஒரு ஏ.சி., பஸ் உட்பட இரு பஸ் இயக்கப்படுகிறது.
திருப்பதிக்கு ஒரு பஸ், திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக மார்த்தாண்டத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது.வாரத்தின் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே சென்னை - திருப்பூர் எஸ்.இ.டி.சி., பஸ்களில் கூட்டம் இருக்கும். ஊட்டியில் இருந்து கோவை, திருப்பூர் வழியாக மார்த்தாண்டம், பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் வழியாக ஓசூர், பெங்களூருக்கு எஸ்.இ.டி.சி., பஸ் இயங்குவதால், கூட்டம் சற்று குறைவாகவே இருக்கும்.
தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் புக்கிங் ஜூலை மாதமே துவங்கிய போதும், முன்பதிவு சுறுசுறுப்பாகவில்லை. இந்நிலையில், நடப்பு மாதம் துவக்கம் முதல் டிக்கெட் புக்கிங் சற்று முன்னேற்றம் அடைந்தது. நேற்று நிலவரப்படி வரும், 23ம் தேதி இரவு முதல், 28ம் தேதி வரை திருப்பூரில் இருந்து சென்னை செல்வதற்கான அனைத்து டிக்கெட்களும் முன்பதிவாகிவிட்டன.
பெங்களூரு, திருப்பதி செல்லும் டிக்கெட்களும் 100 சதவீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் செல்ல முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் தொடர்கிறது.வழக்கமாக இயங்கும் எஸ்.இ.டி.சி., பஸ்கள், ஏ.சி., பஸ்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை, திருநெல்வேலிக்கு கூடுதல் பஸ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, பயணிகள் வசதிக்காக வரும், 23ம் தேதி முதல் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.இதற்கான முன்பதிவு வரும், 21ம் தேதி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் துவங்கப்பட உள்ளது. சென்னைக்கு ஆறு பஸ்களும், திருப்பதி இரு பஸ்களும், பெங்களூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படும். பயணிகள் எண்ணிக்கை ஏற்ப தேவையிருப்பின் பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை