துரிதம்! துார்ந்துபோன முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி...10 கிராம மீனவர்கள் மகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
துரிதம்! துார்ந்துபோன முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி...10 கிராம மீனவர்கள் மகிழ்ச்சி

கிள்ளை:துார்ந்துபோய் இருந்த கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரம், ஆழப்படுத்தும் பணி துரிதமாக நடந்து வருவதால், 10 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு துார்ந்துபோனது. இதனால், கிள்ளை, பட்டறையடி, சின்னவாய்க்கால், பில்லுமேடு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் மற்றும் நாகப்பட்டிணம் பழையாறு வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தனர். இதனால், அவர்களுக்கு காலவிரயமும், பொருட்செலவும் ஏற்பட்டது.
இதுகுறித்து, 10 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், பாண்டியன் எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்ததின்பேரில், கடந்த மாதம் பாண்டியன் எம்.எல்.ஏ., படகில், நேரிடையாக சென்று சின்னவாய்க்கால் முகத்துவாரத்தை பார்வையிட்டார். முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தருவதாக, உறுதியளித்தார். அதை தொடர்ந்து, இரண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் கடந்த 25 நாட்களாக, முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது. பணி இன்னும் சில நாட்களில் முடிவடையும் நிலையில் உள்ளது. மீனவர்கள் நீண்ட துாரம் சுற்றி செல்லாமல், சின்னவாய்க்கால் முகத்துவாரம் வழியாக நேரடியாக கடலுக்கு சென்று விடலாம். இதனால் 10 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மூலக்கதை