தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாளைமறுதினம் பிரசாரம் ஓய்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாளைமறுதினம் பிரசாரம் ஓய்கிறது

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் நாளைமறுதினம் மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்வதால், தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் கூட்டணி கட்சியான காங்கிரசும் போட்டியிடும் என திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.   விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நா. புகழேந்தியும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரனும் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

ஆளும் கட்சியான அதிமுக நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வி. நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் எம். ஆர். முத்தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நாளை மறுதினம் (19ம் தேதி) மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் தற்போது அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீதி வீதியாக சென்று மும்முரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். கட்சி தலைவர்களும் இரு தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

தி. மு. க. தலைவர் மு. க. ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர் தி. மு. க.

தலைவர் மு. க. ஸ்டாலின் விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும் ஏற்கனவே முதல்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். 2ம் கட்ட பிரசாரத்தை கடந்த 13ம் தேதி விக்கிரவாண்டியில் துவக்கினார்.

வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து 2 நாள் பிரசாரம் செய்த அவர், கடந்த 2 நாட்களாக நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று அவர் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, வாக்கு சேகரிக்கிறார்.

மாலை 5 மணிக்கு தென்றல் நகர் புறாக்குளம் அருகில் பிரசாரத்தை துவக்கும் அவர், காமராஜர் மணிமண்டபம் அருகில் உள்ள சாமி பிள்ளை தோட்டத்தில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தொடர்ந்து நாளையும், நாளைமறுநாளும் மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் தி. மு. க.

வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு திரட்டுகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13, 14ம் தேதிகளில் நாங்குநேரியில் பிரசாரம் செய்தார். விக்கிரவாண்டியில் நேற்று கிராமம் கிராமமாக திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்த அவர், இன்றும் அதே தொகுதியில் ஓட்டுவேட்டையாடுகிறார்.

நாளை மீண்டும் நாங்குநேரிக்கு வருகிறார். இதேபோல், விக்கிரவாண்டியில் கடந்த 14ம் தேதி பிரசாரம் செய்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 2 நாட்களாக நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

இன்றும் நாங்குநேரியில் பிரசாரம் செய்யும் அவர், நாளை மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார். திமுக, அதிமுக, காங்கிரசுக்கு ஆதரவாக அவற்றின் கூட்டணி கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சி வேட்பாளரை கடந்த 14, 15ம் தேதிகளில் நாங்குநேரியில் வாக்கு சேகரித்தார். இன்று விக்கிரவாண்டியில் பிரசாரம் செய்கிறார்.



நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை மறுதினம் மாலையுடன் பிரசாரம் ஓய்வதால், தலைவர்கள் முற்றுகையிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். நாளை மறுதினம் மாலை 5 மணியுடன் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள கட்சியினர், தொண்டர்கள் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் 21ம் தேதி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளையும் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இரு தொகுதிகளிலும் ஒரு ஓட்டுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வரை ஆளும்கட்சியினர் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நாங்குநேரி தொகுதியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையிலும், விக்கிரவாண்டிக்கு உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையிலும் பணம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 60 ஓட்டுக்கு ஒரு குழு வீதம் நியமிக்கப்பட்டு பணம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆனாலும் கடைசி நேரத்தில் பணம் விநியோகம் மும்முரமாக நடந்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

.

மூலக்கதை