பொறியாளர்களுக்கு அறிவுரை முழு கொள்ளளவு வரும் வரை தண்ணீரை சேமிக்க வேண்டாம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொறியாளர்களுக்கு அறிவுரை முழு கொள்ளளவு வரும் வரை தண்ணீரை சேமிக்க வேண்டாம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இந்த பருவமழை காரணமாக வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காலகட்டங்களில் தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகளுக்கு நீர்வரத்து இருக்கும் என்பதால் பொறியாளர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஏரி, கால்வாய்களில் திடீரென உடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்யும் வகையில் 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அணைகள் பாதுகாப்பு இயக்குனரகம் சார்பில் இந்தாண்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 3 ஷிப்டுகளாக ஊழியர்களை நியமனம் செய்து அவசர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை தொடர்பு கொள்ளும் வகையில் 044-28415557 என்ற அவசர எண்ணில் தொடர்பு கொண்டு அணை, ஏரிகள் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

மேலும், நீர்நிலைகளில், கால்வாய்களில் சேதம் ஏற்பட்டாலோ பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதேநேரத்தில், அணைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சார்பில் வெள்ள மேலாண்மை திட்டத்தை திறம்பட செயல்படுத்த பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் வழக்கமாக 4 மணி நேரத்திற்கு ஒருமுறை அணை, ஏரிகளின் விவரங்களை அறிக்கையாக தர வேண்டும்.

அதே நேரத்தில் மழை பொழிவு இருக்கும் சமயத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அறிக்கை தர வேண்டும். அணைகளில் முழு கொள்ளளவு வரும் வரை நீரை சேமித்து வைத்திருக்க கூடாது.

எப்போதும் 3 முதல் 5 அடி வரை தண்ணீர் குறைவாக வைத்திருக்க வேண்டும். அணை உயரும் நிலையில் நீர்வரத்தை தொடர்ந்து அந்த தண்ணீரை அப்படியே வெளியேற்ற வேண்டும்.

அதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தர வேண்டும். அதாவது, அணைகளில் தண்ணீர் வருவதை பொறுத்து எச்சரிக்கை அறிவிப்பு விட வேண்டும்.

அதாவது, குறைவாக நீர் வெளியேற்றப்பட்டால் முதல் எச்சரிக்கை விட வேண்டும். இரண்டாவது நீர்வரத்து அதிகரிக்கும் போது இரண்டாவது எச்சரிக்கை விட வேண்டும்.

மொத்தமாக அணைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் போது மூன்றாவது எச்சரிக்கை விட வேண்டும்.

அப்படி செய்தால் மட்டுமே கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்துவது மட்டுமின்றி, தண்ணீர் திறப்பால் ஏற்படும் அசம்பாவிதத்தை தவிர்க்க முடியும் என்று பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை