புதுவை அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் மோதல் 600 பேர் மீது வழக்குபதிவு: 2வது நாளாக பதற்றம் நீடிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதுவை அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் மோதல் 600 பேர் மீது வழக்குபதிவு: 2வது நாளாக பதற்றம் நீடிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் 600 பேர் மீது காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது. 2வது  நாளாக அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு பகுதி மீனவர்களுக்கு இடையே சுருக்கு வலை பயன்படுத்துவது தொடர்பாக அடிக்கடி மோதல்  ஏற்பட்டு வருகிறது. நேற்று நல்லவாடு மீனவர்கள் கடலில் மீன்பிடித்தபோது அங்கு வந்த வீராம்பட்டினம் மீனவர்கள், எல்லை தாண்டி வந்து  மீன்பிடித்ததாக கூறி அவர்களை தாக்கினர்.

இதுபற்றி தகவல் கிடைத்து நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு திரண்டு வந்து நடுக்கடலில் கத்தி, வீச்சரிவாள்,  சுளுக்கி உள்ளிட்ட பயரங்க ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

இதில் இருதரப்பு படகுகளும் சேதமடைந்த நிலையில் சீனியர் எஸ்பி அகன்ஷா  யாதவ் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட மீனவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. இதையடுத்து  போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அதன்பிறகு மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மீனவர்கள் இடையேயான மோதலில் சுகுமாறன், சுரேந்தர், பிரபு, நல்லவாடு அய்யனார், மஞ்சினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.   அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



இந்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் அப்பகுதியை சப்-கலெக்டர் சுதாகர், தாசில்தார் ராஜேஷ் கண்ணா ஆகியோர் ஆய்வு  செய்தனர். பின்னர் வீராம்பட்டினம், நல்லவாடு மீனவ கிராமங்களில் கலவரத்தை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட  நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டது.

புதுச்சேரி, தமிழக போலீசார் 200க்கும் மேற்பட்டோர்  அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் விடியவிடிய அங்கு  ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனிடையே மீனவர்கள் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக வீராம்பட்டினம் சுரேந்தர், நல்லவாடு அய்யனார் ஆகியோர் தனித்தனியாக போலீசில் புகார்  அளித்தனர். அதன்பேரில் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள், வீராம்பட்டினத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள் மீது தவளகுப்பம் போலீசார்  வழக்குபதிவு செய்தனர்.

இதையடுத்து அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக இருதரப்பினும் தலா 10 பேரை பிடித்து  போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 2வது நாளாக ஏராளமான போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களிடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில், நாளை மாவட்ட கலெக்டர் அருண் தலைமையில்  நகர பகுதியில் சமாதான கூட்டத்தை நடத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

.

மூலக்கதை