நெல்லை, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் மழை: குற்றாலத்தில் குளிக்க தடை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நெல்லை, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் மழை: குற்றாலத்தில் குளிக்க தடை

நெல்லை: நெல்லை, தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதிகபட்சமாக சேர்வலாறில் 40 மி. மீ.

மழை பதிவாகியுள்ளது. 2வது நாளாக  இன்றும் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் இடிமின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.   அம்பசாமுத்திரம், ஆய்க்குடி, சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, நாங்குநேரி பாளையங்கோட்டை, பாபநாசம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி,  நெல்லை உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும்  240. 80 மி. மீ. மழையளவு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக சேர்வலாறில் 40 மி. மீ. மழை பதிவாகி உள்ளது.

தொடர்ந்து இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை  வெளுத்துகட்டி வருகிறது. தூத்துக்குடி, திருவைகுண்டம், ஏரல், சாயல்புரம், கழுகுமலை, ஆறுமுகநேரி, ஸ்பிக்நகர், குளத்தூர், நாசரேத், மற்றும்  சுற்றுவட்டாரங்களில் இன்று அதிகாலை 1 மணி முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குளிக்க தடை

குற்றாலத்தில் கடந்த ஐந்து தினங்களாக அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து வந்தது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக பகல்  வேளைகளில் சற்று மழை பெய்த போதும் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை.   இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் குற்றாலம், தென்காசி பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சுமார் 2 மணி நேரம்  தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர்  கொட்டியதால் காலை 8. 30 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதேபோல் ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து  அதிகரித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

.

மூலக்கதை