மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 2 தமிழர்களிடையே கடும் போட்டி: சியா கொலிவடா தொகுதியில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 2 தமிழர்களிடையே கடும் போட்டி: சியா கொலிவடா தொகுதியில் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில், சியா கொலிவடா தொகுதியில் 2 தமிழர்களிடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 21ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜ - சிவசேனா கூட்டணி  ஓரணியாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியும் களம் காணுகின்றன.

பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மும்பை மாநகரத்துக்குட்பட்ட, தமிழ்  மொழி பேசுபவர்கள் அதிகமுள்ள சியா கொலிவடா சட்டப்பேரவைத் தொகுதியில், பாஜ, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் இரு தமிழர்கள்  களமிறக்கப்பட்டுள்ளனர்.



பாஜ சார்பில் சியா கொலிவடா தொகுதியில், தற்போது எம்எல்ஏவாக உள்ள தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இவர், கடந்த 2014ல் நடைபெற்ற  சட்டப்பேரவைத் தேர்தலில், சிவசேனா வேட்பாளர் மகேஷ் சாதம்கரை சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இம்முறை மீண்டும்  அவருக்கு இதேதொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1978ல் தமிழகத்தில் இருந்து வேலை தேடி மும்பைக்கு சென்ற தமிழ் செல்வன், பல்வேறு பணிகளை செய்து முன்னேற்றம் கண்டார்.


பின்னர் ரயில்வே பணிகளுக்கான ஒப்பந்ததாரராகவும், முழுநேர அரசியல்வாதியாகவும் வளர்ந்தார். 2012ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி  பெற்று, மும்பை மாநகரின் 168வது வார்டு கவுன்சிலரானார்.

அடுத்த இரண்டே ஆண்டுகளில், சியா கொலிவடா தொகுதியின் பாஜ எம்எல்ஏவாக  தேர்வானார். இந்நிலையில், தமிழ்ச்செல்வனுக்கு எதிராக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கணேஷ் யாதவை காங்கிரஸ் கட்சி இதே தொகுதியில்  களமிறக்கி உள்ளது.



எம்பிஏ பட்டதாரியான கணேஷ் யாதவ், மும்பை இளைஞர் காங்கிரசின் தலைவராக உள்ளார். வியாபாரம் செய்து வருகிறார்.

இரு தமிழர்களுக்கும்  கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிகம் நிறைந்த சியன் கொலிவடாவில், யார் வெல்லப் ேபாகிறார்கள் என்ற  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தொகுதியில், சாலை உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளால்  சுற்றுச்சூழல் மாசு பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

சியன் கொலிவடா தொகுதியில், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி மொழி பேசம் மக்களுடன், தமிழர்களும் அதிகளவில் உள்ளனர்.

அதனால்,  இத்தொகுதியில் இம்முறை வெற்றி பெறப்போகும் தமிழர் யார் என்பது வருகிற 24ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.

.

மூலக்கதை