விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்த 3.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: ஆர்கே.பேட்டையில் அதிகாரிகள் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்த 3.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: ஆர்கே.பேட்டையில் அதிகாரிகள் அதிரடி

பள்ளிப்பட்டு: ஆர்கே. பேட்டை பகுதியில் விவசாயிகள் ஆக்கிரமித்துவைத்திருந்த மூன்றரை ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர். கே. பேட்டை அடுத்த ஜிசிஎஸ் கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட இஎம்ஆர் கண்டிகை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் மூன்றரை ஏக்கர் ஏரி புறம்போக்கு உள்ளது.

இந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த 2 விவசாயிகள் ஆக்கிரமித்து, இரும்பு வேலி அமைத்து பயன்படுத்தி வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றது. இதையடுத்து, அரசு நிலத்ைத ஆக்கிரமித்துவைத்துள்ளதாக கூறப்படும் 2 விவசாயிகளுக்கு வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி, ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தில் அமைத்துள்ள இரும்பு வேலியை வருவாய் துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரும்பு வேலியை அகற்றுவதற்கு 2 விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வருவாய் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி ஆர். கே. பேட்டை மண்டல துணை வட்டாட்சியர் மலர்விழி, வருவாய் ஆய்வாளர் சுந்தரவேலு, கிராம நிர்வாக அலுவலர் தருமன் ஆகியோர் மேற்பார்வையில், ஜெசிபி இயந்திரம் மூலம் கல் தூண்கள், இரும்பு வேலி முற்றிலும் அகற்றப்பட்டது.

இதுகுறித்து விவசாயி சேகர் கூறுகையில், ‘’கால அவகாசம் தராமல் விவசாய நிலத்தின் பாதுகாப்புக்கு வைத்திருந்த இரும்பு வேலி, தூண்களை வருவாய் துறையினர் அகற்றியுள்ளனர். சாலையோரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை சர்வே செய்து, குறிப்பிட்ட இடத்தில் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தோம்.

இருப்பினும் வருவாய் துறையினர் ஏற்க மறுத்து இரும்பு வேலியை அகற்றிவிட்டனர்’ என்றனர்.

.

மூலக்கதை