காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்; படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்; படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு

சென்னை: வடிவேலுவுடன் பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்த கிருஷ்ணமூர்த்தி(55) படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்  அடைந்தார். விஜயகாந்த் நடித்த தவசி படத்தில் `எஸ்க்யூஸ்மி, ஸாரி ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா’ என்று நடிகர்  வடிவேலுவிடம் பின்லேடன் வீட்டு அட்ரஸ் கேட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தும் பைத்தியம் போல் நடித்திருந்தவர் கிருஷ்ணமூர்த்தி.

மேலும் பல்வேறு  படங்களில் அவர் வடிவேலுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் வரவேற்பை பெற்றது.

   நான், நான் கடவுள் போன்ற படங்களில் குணசித்ர  வேடங்களிலும் கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். முன்னதாக அவர் திரைப்படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில், கேரளாவின் குமுளி அருகே வண்டிப்பெரியாரில் நடந்த படப் பிடிப்பு ஒன்றில் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு நடித்தார்.

அப்போது  படப் பிடிப்பு தளத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை  படக்குழுவினர் அழைத்துச் சென்றனர்.

ஆனால், போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.   கிருஷ்ணமூர்த்தி உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


.

மூலக்கதை