தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாத்தல் மற்றும் மரம் நடுதல் பணிகள்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாத்தல் மற்றும் மரம் நடுதல் பணிகள்

தமிழ்நாட்டின் நிலத்தடிநீர் அபாயகரமான நிலையை நோக்கிச் சென்றுவரும் நிலையில் சென்னை முதல் கடைக்கோடி கிராமங்கள் வரை அனைத்தும் குழாய் தண்ணீரை நம்பி இருந்த நிலை பொய்த்துவிட்ட நிலையில் தண்ணீர்ப் பிரச்சினை அனைவரையும் சிந்திக்கவைத்துள்ளது. 

கிராமங்களில் உள்ள குளங்கள் தூர்வார ஊர் கட்டுப்பாடு ஏற்படுத்தி வீட்டிற்கு ஒருவர் தூர்வாரும்  பணி செய்ய வரவேண்டும் அல்லது அவர்கள் வராததற்கு உரிய நிதியைக் கொடுத்துவிடவேண்டும் என்று ஊர்கூடி நீர்நிலைகளைப் பாதுகாத்ததை நாம் அறிவோம்.  அந்த நிலை மாறி, இன்று அந்தந்த ஊரில் உள்ளவர்களே கைகோர்த்து நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து பேராசை பயணங்களைத் தொடர்ந்ததால் விளைவை இன்று அனைவரும் சந்திக்கிறோம்.  

தமிழ்நாட்டின் பல்வேறு பெரும்பாலான குளங்கள் தூர்வாரப்படாமல் போட்டுவைத்து அதை ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்டிவிட்டனர். எஞ்சியத்தையாவது காப்பாற்றுங்கள் என்று பலரும் கூக்குரல் கொடுத்துவரும் நிலையில், இயற்கையாக ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடும், அதனால் ஊர் நிர்வாகத்தால் குழாயில் நீர் கொடுக்கமுடியாது நிலையும் , நிலத்தடி நீர் மட்டம் ஐந்நூறு, ஆயிரம், இரண்டாயிரம் என்று ஒவ்வொரு பகுதிக்கேற்பப் போய்விட்ட நிலையில், ஆழ்துளையில் போட்டாலும் நீர் கிடைக்குமா என்ற பெரும் கவலை மக்களைச் சூழ்ந்துள்ளது.  இந்த நிலையில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரி பாதுகாப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, உள்நாடு, வெளிநாடு தொண்டு அமைப்புகள், தனி மனிதர்கள் கைகோர்த்து நீர்நிலைகளைப் பராமரிப்பது , மரம்நடுவது என்று பல்வேறு பணிகள் தமிழகத்தில் பரவலாகப் பார்க்கப்படுகிறது.  

இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் CSR - நிதிகள்  பல இடங்களில் நீர்நிலைகளைப் பராமரிக்கச் செலவிடப்படுவது மக்களிடையே மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.  இந்த வேகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகள் தொய்வில்லாமல் அரசும், தனியார் நிறுவனங்களும், தொண்டு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இணைந்து நீர்நிலைகளை மீட்டெடுப்பது, மரம் நடுவது ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் தமிழகத்தின் நீராதாரத்தை ஓரளவு மீட்டெடுக்கலாம். 

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குக் கிடைக்கும் நிதிகளை நீராதாரத் திட்டங்களுக்குச் செலவிட, தடுப்பணைகள் கட்ட, மரம் நட அரசு  உறுதியான கொள்கை முடிவு எடுத்தால் உறுதுணையாக இருக்கும். 

மூலக்கதை