மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு புத்தகத் திருவிழா விஜய் சத்தியா

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு புத்தகத் திருவிழா விஜய் சத்தியா

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 13 வரை வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இது மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் 15ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா. சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. பொன்னீலன் இவ்விழாவை துவங்கிவைத்தார். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டத்தோஸ்ரீ எம். சரவணன் அரங்கினுள் அமைக்கப்பட்ட கலாநிதி பா. சிவதம்பி நினைவு உலகத்தமிழர் படைப்பரங்கத்தை திறந்துவைத்தார். இந்த அரங்கம் இலங்கையைச் சேர்ந்த மறைந்த பேராசிரியர் திரு. கலாநிதி பா. சிவதம்பியின் நினைவாக அமைக்கப்பட்டது. 

மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் வரவேற்புரை. 

மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் உலகத்தமிழர்களின் படைப்புகளைப் பேரவையின் முயற்சியில் வாங்கி விற்பனைக்கு வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் உள்ள உலகத்தமிழர்களின் படைப்புகளைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது. 

மொத்தமாக 230 அரங்குகளில் புத்தகங்கள் விற்கப்பட்டது.  வம்சி பதிப்பகம், தேசாந்திரி பதிப்பகம், காலச்சுவடு, சாகித்திய அகடமி, விகடன் மற்றும் பல பதிப்பகத்தின் அரங்குகள் இருந்தது. பல புகழ் பெற்ற எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. எஸ். இராமகிருஷ்ணன் வாசகர்களைச் சந்தித்தார். அவரைச் சுற்றி இளைஞர் கூட்டம் அமர்ந்துகொண்டு இலக்கியம் பற்றி விவாதித்தார்கள்.  எஸ்ராவும் சளைக்காமல் உலக இலக்கியம், வரலாறு, புதிய எழுத்தாளர்கள், கதைகள் என்று சுவையாக உரையாடினார். 


எழுத்தாளர் திரு. எஸ். இராமகிருஷ்ணன் சந்திப்பு

நானும் அவருடைய சாகித்திய அகடமி விருது பெற்ற சஞ்சாரம் என்ற நாவலை அவர் கையெழுத்துடன் வாங்கிக்கொண்டேன். திரு எஸ்.ராவுடன் பேசிக்கொண்டிருந்தபோது சில இலக்கிய ஆர்வலர்கள் இணைந்துகொண்டார்கள். அவர்களில் ஈரோடு கிருஷ்ணன் மற்றும் அந்தியூர் மணி ஏற்கனவே அறிமுகமானது போல் இருந்தார்கள். அவர்கள் எழுத்தாளர் ஜெயமோகன் இலக்கிய வட்ட நண்பர்கள். ஈரோடு கிருஷ்ணன் என்னோடு இணைந்து கொண்டார். நான் தேடிக்கொண்டிருந்த அரிய புத்தகங்களை நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்திய அகடமி, காலச்சுவடு, வம்சி பதிப்பகம் என்று தேடி தந்தார்கள். 

ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குச் சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் ‘கற்றதைச் சொல்கிறேன்’ என்ற தலைப்பில் படிப்பதினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பேசினார்.  நக்கீரன் கோபால் ‘அளவுக்கு மீறினால்’ என்ற தலைப்பில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் பாதிப்பைப் பற்றி பேசினார். பாதிரியார் ஜெகத் காஸ்பர் ‘தலை நிமிர் காலம்’ என்ற தலைப்பில் தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதகங்களைப் பற்றி பேசினார். திரு. பாலகிருஷ்ணன்  ஐ.ஏ.எஸ் ‘ உயில் அல்ல உரிமை என்ற தலைப்பில் கீழடி அகழ்வாய்வு பற்றி பேசினார். இவ்வாறு பல அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். 

பல லட்சம் பேர் இந்த புத்தக விழாவில் கலந்துகொண்டார்கள். ஏழு கோடி ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்றுள்ளன. இந்த விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைந்த மக்கள் சிந்தனைப் பேரவைக்கு நமது பாராட்டுகள், வாழ்த்துகள்.

மூலக்கதை