கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கேளம்பாக்கம் மக்கள் கடும் அவதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கேளம்பாக்கம் மக்கள் கடும் அவதி

திருப்போரூர்: சென்னைக்கு அருகே வளர்ந்து வரும் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் ஏராளமான தனியார் வீட்டு மனைப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் 50க்கும் அதிகமான தெருக்கள் உள்ளன.

கேளம்பாக்கம் பகுதி மிக வேகமாக வளர்ந்து வந்தாலும் போதிய நிதி இல்லாததால் தேவையான வளர்ச்சி பணிகளை செய்ய முடியவில்லை. இதனால் எம்எல்ஏ மற்றும் எம்பி ஆகியோரின் தொகுதி வளர்ச்சி நிதியையே நம்பி ஊராட்சி வளர்ச்சி பணிகளை நடத்த வேண்டிய நிலை உள்ளது.

இதனால் ஊராட்சியின் பல தெருக்கள் மண் சாலையாக காட்சி அளிக்கின்றன. ஒரு நாள் மழை பெய்தாலே முட்டுஅளவிற்கு மழைநீர் தேங்கி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் யாரிடம் போய் தங்களின் குறைகளை சொல்வது என பொதுமக்கள் தாங்களாகவே குடியிருப்போர் நல சங்கங்கள் அமைத்து தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொள்கின்றனர்.

இதனால் அரசு நிர்வாகமும் இந்த ஊராட்சியை கண்டு கொள்வதில்லை.

இதனால் கேளம்பாக்கம் ஊராட்சியின் சீனிவாசா நகர், வீராணம் சாலை, அஜீத் நகர், சுசீலா நகர், பிள்ளையார் கோயில் தெரு, கே. எஸ். எஸ். நகர், நந்தனார் நகர், மாதா கோயில் தெரு போன்ற இடங்களில் நல்ல சாலை வசதிகள் இல்லாததோடு, வீதிகள் எங்கும் சாக்கடை கழிவுகளும், குப்பைகளும் தேங்கி நிற்கின்றன.

இதனால் கொசு உற்பத்தியாகி மக்களுக்கு தொற்று நோயை பரப்புகிறது.

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கேளம்பாக்கம் ஊராட்சியில் கவனத்தை செலுத்தி அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.

மூலக்கதை