ரோஜா, மஞ்சள் நிற பட்டாடையில் அருள்பாலிப்பு அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு...நாளை அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரோஜா, மஞ்சள் நிற பட்டாடையில் அருள்பாலிப்பு அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு...நாளை அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படும்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த மாதம் 1ம் தேதி தொடங்கியது. சயன கோலத்தில் கடந்த மாதம் 31ம் தேதிவரை  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி  வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.



ஜனாதிபதி, கவர்னர், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என கடந்த 46 நாட்களில் சுமார் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர்.   வைபவம் முடிவடையும் நாட்கள் நெருங்க நெருங்க பக்தர்கள்  எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றுடன் விஐபி தரிசனம்  நிறைவடைந்ததால் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. பக்தர்கள் வந்த வாகனங்கள், காஞ்சிபுரம் நகரில்  எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது.



அங்கிருந்து, சுமார் 7 கி. மீ தூரம் நடந்து கோயிலுக்கு சென்றனர். நேற்று மாலை 6 மணிக்கு, ஆடி கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது.

வரதராஜ  பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதிகளை வலம் வந்த காட்சியை  திரளான பக்தர்கள் தரிசித்தனர். 47வது நாளான இன்று ரோஜா, மஞ்சள் நிற பட்டாடை அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று கடைசிநாள் என்பதால் அதிகாலை முதலே சுமார் 2 கிமீ தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட  வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். நாளை, அனந்தசரஸ் கோயில் குளத்தில் உள்ள நீராவி மண்டபத்துக்குள் ஒதுக்கப்பட்ட இடத்தில் அத்திவரதரை வைப்பார்கள்.

அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பான நடந்து வருகிறது.

.

மூலக்கதை