பாஸ்வேர்டு, வங்கி கணக்கு விவரங்களை தரவேண்டாம் இஎம்ஐ சலுகை தருவதாக புதிய மோசடி: வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
பாஸ்வேர்டு, வங்கி கணக்கு விவரங்களை தரவேண்டாம் இஎம்ஐ சலுகை தருவதாக புதிய மோசடி: வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை

புதுடெல்லி: இஎம்ஐ சலுகை பெற்றுத் தருவதாக கூறி யாரேனும் தொடர்பு கொண்டால், அவர்களிடம் வங்கி கணக்கு, டெபிட் கார்டு, ஒரு முறை பாஸ்வேர்டு ஆகியவற்றை கொடுத்து ஏமாற வேண்டாம் என வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.  கொரோனாவால் வேலையிழப்பு, வருவாய் சரிவு போன்றவை ஏற்பட்டுள்ள நிலையில், கடன் தவணைகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. பொதுத்துறை வங்கிள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த பரிந்துரை பொருந்தும். இதை தொடர்ந்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இஎம்ஐ சலுகையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ், இ-மெயில் மற்றும் அதற்கான பிரத்யேக விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளன. இதற்கிடையில், இஎம்ஐ சலுகையை பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளை நம்பி வாடிக்கையாளர்கள் ஏமாற வேண்டாம் என வங்கிகள்  எச்சரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து ஆக்ஸிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உட்பட சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் அனுப்பியுள்ளன.  அதில், இஎம்ஐ சலுகையை பயன்படுத்தி சில மோசடி பேர்வழிகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதாவது, வங்கியில் இருந்து பேசுவது போல் வாடிக்கையாளர்களிடம் மோசடி ஆசாமிகள், இஎம்ஐ சலுகையை பெற உதவுவதாக கூறுகின்றனர். இதை நம்பும் வாடிக்கையாளர்களிடம் வங்கி கணக்கு விவரங்கள், டெபிட் கார்டு எண், பின் நம்பர், ஒரு முறை பாஸ்வேர்டு ஆகியவற்றை கேட்டு வங்கி கணக்கு விவரங்களை திருடுகின்றனர். அவற்றை வைத்து வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர். இப்படிப்பட்ட மோசடியாளர்களிடம் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு போதும் அவர்களிடம் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள், ஒரு முறை பாஸ்வேர், டெபிட் கார்டு அல்லது ஏடிஎம் கார்டு பின் நம்பர் ஆகியவற்றை வழங்க வேண்டாம் என வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுபோல், கொரோனா பாதிப்புக்கான பிரதமர் நிதிக்கு நன்கொடை வழங்குவோர் போலியான யுபிஐ ஐடிக்கு பணம் அனுப்ப வேண்டாம் என வங்கிகள் சில தினங்கள் முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை