உள்ளே வராதீங்க! முழுமையாக 'சீல்' வைக்கப்பட்டுள்ளது மங்கலம் ஊராட்சி

தினமலர்  தினமலர்
உள்ளே வராதீங்க! முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது மங்கலம் ஊராட்சி

திருப்பூர்:டில்லி சென்று வந்த குடும்பத்தார் அதிகம் இருப்பதாலும், கொரோனா தொற்று பரவியுள்ளதாலும், மங்கலம் ஊராட்சி முழுமையாக 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பல மாநிலங்களில் வேகமாக பரவிய போதும், தமிழகம் மிகுந்த கட்டுப்பாடுடன் இருந்தது.
டில்லி சென்று வந்தவர்கள் மூலமாக, மாநிலத்துக்குள் கிருமி தொற்று இறக்குமதியாகிவிட்டது.தாங்களாக முன்வந்து, பரிசோதனை செய்ய அறிவுறுத்தியும் வராததால், போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம், 69 பேரில், ஒருவர் டில்லியில் இருந்து வரமுடியாமல் தங்கிவிட்டார்.மீதியுள்ள, 68 பேரில், 19 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. மங்கலம் பகுதியில், 57 மற்றும் 46 வயதுள்ள இருவர், நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நேற்று முன்தினம், கொரோனா தொற்று உறுதியான நிலையில், நேற்று மங்கலம் சுற்றுப்பகுதிகள் சீலிடப்பட்டன.
மங்கலத்தில் இருந்து, பல்லடம்ரோடு, சோமனுார், ரோடு, அவிநாசி ரோடு மற்றும் திருப்பூர் ரோடு என, முக்கியமான நெடுஞ்சாலை ரோடுகள் அடைக்கப்பட்டுள்ளன.அவசர, அத்தியாவசிய தேவைகளுக்கு செல்பவர் மட்டும், பதிவேடுகளில் விவரங்களை எழுதி வைத்து, போலீசாரின் அனுமதி பெற்று செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:'மங்கலம், கொரோனா கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மங்கலத்தை சுற்றியுள்ள, மூன்று கி.மீ., பகுதிகள் சீலிடப்பட்டுள்ளன. நான்கு மாநில நெடுஞ்சாலை ரோடுகளும் 'சீல்' வைத்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவசியமின்றி, யாரும் வெளியே சென்றுவர முடியாது; வெளியாட்களும் வரமுடியாது. வீட்டில் உள்ள சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அவர்களது உடல்நிலை ஆய்வு செய்யப்படும். யாராவது அறிகுறியுடன் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

மூலக்கதை