நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு; பஸ், ரயில்கள் ஓடவில்லை: வழிபாட்டு தலங்கள் மூடல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு; பஸ், ரயில்கள் ஓடவில்லை: வழிபாட்டு தலங்கள் மூடல்

சென்னை: பிரதமர் மோடி வேண்டுகோளின்படி, கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு நடைபெறுகிறது. இதையடுத்து மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.

பஸ், ரயில்கள் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. வழிப்பாட்டு தலங்கள் மூடப்பட்டன.

கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளை தொடர்ந்து. இந்தயாவிலும் வேகமாக பரவி வருகிறது.

இதுவரை இந்தியாவில் 332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக 3 ஆக இருந்தநிலையில், நேற்று மட்டும் திடீரென புதியதாக 3 பேருக்கு கொரோனா உறுதியானதாக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. கடந்த சில வாரமாக 1,2 என இருந்த எண்ணிக்கை ஒரே நாளில் 3 என அதிகரித்து 6 ஆக உயர்ந்தது மக்கள் மனதில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



மேலும், சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானோரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி உள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 64 பேருக்கு மேல் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இந்தநிலையில், பிரதமர் மோடி கொரோனா வேகமாக பரவுவதை தடுக்கவும், அதனை கட்டுப்படுத்தவும், மக்கள் இன்று ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளுக்குள் இருக்க ஊரடங்கு கடைபிடிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி இந்தியா முழுவதும் பேருந்து, ரயில், விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டது. நாட்டின் எல்லைகளும் மூடப்பட்டன.

தொடர்ந்து நாட்டின் தலைநகர் டெல்லி முடங்கியது. மும்பை, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, ஆந்திர, கர்நாடகா என இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் மக்கள் ஊரடங்கால் வெறிச்சோடியது.



தமிழகம் முழுவதும் இயங்கும் 19 ஆயிரம் அரசு பேருந்துகள், 3200 சென்னை மாநகர பேருந்துகள், சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் 64 ரயில்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் இயக்கப்படும் 47 ரயில்கள், திருச்சி கோட்டத்தில் இயக்கப்படும் 17 ரயில்களும், பாலக்காடு கோட்டத்தில் இயக்கப்படும் 24 ரயில்களும், சேலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 13 ரயில்களும் மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் 22 ரயில்கள் என தமிழகம் முழுவதும் 183 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதேபோல் கடற்கரை முதல் செங்கல்பட்டு, மூர் மார்க்கெட் முதல் கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் வரை இயக்கப்படும் 101 புறநகர் ரயில்கள்  நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த மூன்று வழித்தடத்தில் காலை 6 முதல் 11 வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் பறக்கும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.



இதேபோல் தமிழகத்தில் இருந்து செல்லும் 114 விமானங்கள், தமிழகத்திற்கும் வரும் 200 விமானங்கள் என விமான போக்குவரத்துகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் மூடப்பட்டது.

முக்கியமாக சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, நேற்று மாலை முதலே தடை விதிக்கப்பட்டது. அனைத்து நிறுவனங்களும் இயங்க தடை விதித்து மூட உத்தரவிடப்பட்டது.

வெளி மாநில வாகனங்கள் தமிழக எல்லைக்குள் வர தடை விதித்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா தமிழக எல்லைகளுக்கு சீல் வைக்க வேண்டும். அத்தியாவசிய போக்குவரத்து தவிர்த்து வேறு ஏந்த பயணங்களும் இருக்க கூடாது, வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள், சில தவிர்க்க இயலாத காரணங்களுக்கு மட்டுமே இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.

அதன்படி ஆந்திர மாநில எல்லையான ஊத்துக்கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தமிழக-கர்நாடக எல்லையான பண்ணாரி சோதனை சாவடி மூடப்பட்டது. இதேபோல் தமிழகம் மற்றும் கேரளாவிற்கான போக்குவரத்தும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
கொரோனாவில் இருந்து தங்களை காப்பாற்றிகொள்ள ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் சமூக வலைதளங்கள் மூலமாக வீடியோ பதிவிட்டு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்களுக்கும் கொரோனா குறித்த அச்சமும், விழிப்புணர்வின் காரணமாக. கொரோனாவை எதிர்கொள்ள மக்களும் தங்களது சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்களில் இது குறித்து பதிவுகளையும், ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் நேற்று இரவு முதலே ஊரடங்குக்கு ஆதரவை தெரிவிக்க தயாராகினர்.

குறிப்பாக இன்று ஒரு நாள் வீட்டிற்கு என்னென்ன பொருட்கள் தேவையோ அவற்றையெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டனர். அதன்படி இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் தலைநகர் சென்னையே வெறிச்சோடியது.

வழக்கமாக காலை 5 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதும் மெரினா கடற்கரை சாலை, வாகன நெருக்கத்தில் சிக்கிகொள்ளும் அண்ணாசாலை வெறிச்சோடியது. வார இறுதி நாளானால் கார்கள் பறக்கும் ஈசிஆரில் வாகன வேகம் குறைந்தது.

இதேபோல் சென்னையின் முக்கிய இடமான சென்ட்ரல், கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட இடங்களும் வெறிச்சோடியது. எங்கேனும் ஒரு சிலர் மட்டுமே கண்ணுக்கு தென்பட்டனர்.

இருசக்கர வாகனங்கள், ஒரு சில கார்கள் மட்டுமே ஆங்காங்கே சென்று கொண்டிருந்தன.

டீக்கடை முதல், வணிக வளாகம் வரை அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான வழிப்பாட்டு தலங்கள் மூடப்பட்டிருந்தது. மக்கள் வீட்டிற்குள்ளேயே தங்களது வழிபாட்டை முடித்து கொண்டனர்.

ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடியது. இரவு பகல் என எப்போதும், மக்கள் கூட்டம் அலைமோதும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் வெறிச்சோடியது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி,  தஞ்சை, புதுகை, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் சாலைகள் வெறிச்சோடியது. சுற்றுலாவுக்கு இதமாக தமிழகத்தின் குளிர் பிரதேசமான நீலகிரி மாவட்டம் கூட்டம் இல்லாமல் காலியானது.   இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர்.



சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரி வெறிச்சோடியது. கன்னியாகுமரி வரலாற்றில் சூரிய உதயத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் இல்லாதது இதுவே  முதன்முறை என்று தெரிகிறது.

சுகாதாரம், காவல்துறை, ஊடகத்துறையினர் தவிர மக்கள் வீட்டிற்குள்ளையே முடங்கினர். இருந்தும் தமிழகத்தின் வெளிமாநில எல்லைகளான கேரளா, ஆந்திரா, கர்நாடகா வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்தது.

அவற்றை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்கள் மட்டுமே தவிர்க்க முடியாத காரணங்களால் அனுமதிக்கப்பட்டன.

இறைச்சி கடை திறந்தது
முழு அடைப்பு என்பதால் காலை முதல் கடைகள் மூட உத்தரவிடப்பட்டது.

ஆனால் இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் அசைவ பிரியர்கள் இறைச்சி உண்பார்கள் என்பதால். தமிழகத்தின் பல்வேறு இடங்களில், அதிகாலை 2 மணிக்கே இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு காலை மூடப்பட்டது.

அம்மா உணவகத்தில் கூட்டம்
ஹோட்டல்கள் முழுவதும் மூடப்பட்டதால், வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வசிப்பவர்கள், உணவுக்கு அலைமோதினர்.

இந்தநிலையில் அரசின் அம்மா உணவகங்கள் திறந்திருந்ததால் அங்கே சென்று, பலர் சாப்பிட்டனர்.   எப்போதும் 11 மணி வரை இருக்கும் உணவுகள், இன்று காலை 8 மணிக்கே தீர்ந்து போனது. எப்போதும் செய்யப்படும் அளவில் மட்டும் உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக தயாரிக்க அரசு உத்தரவிட்டிருக்கலாம் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

எளிமையாக நடந்த திருமணங்கள்
தமிழகம் முழுவதும் இன்று பல ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், ஊரடங்கு என்பதால், உறவினர்களில் வருகை குறைவாகவே இருந்தது.

சிலர் திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்துகொண்டனர்.

மது விற்பனை
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், தமிழகத்தின் பல இடங்களில் நேற்றே சிலர் மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு, இன்று பிளாக்கில் விற்பனை செய்தனர்.


.

மூலக்கதை