ரூ.87,500 ! வெங்காய சேமிப்பு கோடவுனுக்கு மானியம்....மிரட்டிய விலை உயர்வால் கிடைத்தது திட்டம்

தினமலர்  தினமலர்
ரூ.87,500 ! வெங்காய சேமிப்பு கோடவுனுக்கு மானியம்....மிரட்டிய விலை உயர்வால் கிடைத்தது திட்டம்

மதுரை:மதுரை மாவட்டத்தில் வெங்காய சேமிப்பு கோடவுன் அமைக்க விவசாயிகளுக்கு ரூ.87,500 மானியம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு 25 டன் வெங்காயம் இருப்பு வைக்கலாம்.

சமீபத்தில் நாடு முழுவதும் வெங்காயம் விலை எகிறியது. கிலோ ரூ.200 வரை விற்றது. இக்காலத்தில் வெங்காயம் அறுவடை செய்த விவசாயிகள் லாபம் சம்பாதித்தனர். இவர்களை காட்டிலும் ஏற்கனவே வெங்காயத்தை இருப்பு வைத்திருந்த வியாபாரிகள் பண மழையில் நனைந்தனர்.
சமையலில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளதால், வெங்காயம் உச்ச விலையை தொட்ட வரலாறு பலமுறை நிகழ்ந்துள்ளது. இது போன்ற காலத்தில் வியாபாரிகளை விட உற்பத்தி செய்யும் விவசாயிகள் பலன் அனுபவிக்க புதிய திட்டத்தை தோட்டக்கலைத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, அறுவடை செய்த வெங்காயத்தை சொற்ப விலைக்கு உடனே விற்காமல், விலை ஏறும் வரை இருப்பு வைத்து விற்க சேமிப்பு கோடவுன் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இக்கோடவுனில் 25 டன் வரை வெங்காயத்தை சேமிக்கலாம். இதற்கு ரூ.87,500 மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை துணை இயக்குனர் பூபதி கூறுகையில், ''மதுரை வெங்காய விவசாயிகளுக்கு இத்திட்டம் நல்ல பலனை தரும். கிலோ ரூ.100, 120 வரும் வரை இருப்பு வைத்து விற்கலாம். இக்கோடவுன் அமைக்க ரூ.1.5 லட்சம் வரை செலவாகும். இதில் அரசு மானியம் ரூ.87,500. விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

மூலக்கதை