சேலம் அருகே பஸ்கள் மோதல் நேபாளத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி: 26 பேர் படுகாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சேலம் அருகே பஸ்கள் மோதல் நேபாளத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி: 26 பேர் படுகாயம்

ஓமலூர்: ஓமலூர் அருகே நேற்று நள்ளிரவில் 2 பஸ்கள் மோதிய விபத்தில், நேபாள நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 26 பேருக்கு சேலம் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேபாள நாட்டின் காத்மாண்டுவை சேர்ந்த 32 பேர், இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை  சுற்றி பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு மினி பேருந்தில் சுற்றுலா புறப்பட்டனர். இந்த பேருந்தை காத்மாண்டுவை சேர்ந்த கவுல்ராம் சௌதாரி, இட்டோடி சுந்தாரி ஆகியோர் மாறி மாறி ஓட்டி வந்தனர்.

இவர்கள் நேற்று கன்னியாகுமரி சென்று அங்குள்ள கோயில்களில் தரிசனத்தை முடித்து கொண்டு, அங்கிருந்து ராஜஸ்தான் செல்வதற்காக சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நரிப்பள்ளம் என்னுமிடத்தில் வந்தபோது, அங்கிருந்த காளியம்மன் கோயில் மண்டபத்தை பார்த்தனர்.



நள்ளிரவு 1 மணியானதால் மண்டபத்தில் ஓய்வு எடுத்துவிட்டு காலையில் செல்லலாம் என எண்ணினர். அதற்காக, இடது பக்க சாலையில் இருந்து வலதுபக்க சாலைக்கு மினி பேருந்தை ஓட்டுனர் கவுல்ராம் சௌதாரி திருப்பினார்.

அப்போது, பெங்களூரில் இருந்து கேரளா சென்ற ஆம்னி பேருந்து, மினி பேருந்தின் நடுப்பகுதியில் பலமாக மோதியது. இந்த விபத்தில் நேபாளிகள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், பேருந்தில் வந்த 28 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்த நான்கு பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் இறந்தவர்கள், நேபாளத்தை சேர்ந்த பீர்பதூர் ராய், டிகாராம், கோபால் தமன், போதினி, புல்கரி சவுத்திரி, விஷ்ணு தங்கல் ஆகியோர் என்பது தெரியவந்தது.

காயமடைந்த காணி சவ்திரி (50), மனவதி (40), ரேணுகா கோபா (70), பூசார் சவ்திரி (55), பீம்லா சவ்திரி (52) உட்பட 26 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


.

மூலக்கதை