தேர்வாணையம் மீது மக்கள் நம்பிக்கை இழப்பு காவலர் தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்வாணையம் மீது மக்கள் நம்பிக்கை இழப்பு காவலர் தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 2ம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் தேர்வை எதிர்த்து திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது: தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை.

சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு முறைகேடுகளை விட, சீருடை பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.



மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ‘டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டு விசாரணை நடந்து வருகிறது. இப்போது, போலீஸ் துறையிலும் கான்ஸ்டபிள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுபோன்ற தவறுகளால் தேர்வாணையங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள். தமிழகத்தில் பிறந்ததை பெருமையாக நாம் கருதுகிறோம்.

ஆனால் நேர்மை தற்போது குறைந்து விட்டது.

தேர்வாணையங்கள் இதுபோன்று செயல்பட்டால், சாமானிய மக்கள் எப்படி அரசு பணிக்கு செல்ல முடியும்? எத்தனை பேர், இந்த கான்ஸ்டபிள் வேலைக்காக எத்தனை நாட்கள், தங்களை தயார்படுத்தி இருப்பார்கள்.

ஆனால், அதிகாரிகள் செய்யும் தவறுகளால், அதுபோன்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது. மனுதாரர்கள் குறிப்பிட்டபடி, வேலூரில் உள்ள ஒரு மையத்தில் இருந்து மட்டும் 1019 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர், 69 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒரே மாதிரியான மதிப்பெண் பெற்றிருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது என்று மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், உடல் தகுதி தேர்வில், அவர்களுக்கு ஒரே சீராக உயர அளவு தரப்பட்டுள்ளது. உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



ஏற்கனவே டிஎன்பிஎஸ்சியில் முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், காவல் பணியிலும் இதுபோன்று நடந்தால், காவல் துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். இது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது.

எனவே, கான்ஸ்டபிள் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

இந்த வழக்கில் தமிழக அரசு, மார்ச் 5ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

.

மூலக்கதை